2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

'சிறுபான்மையினருக்காக எழுத்தின் மூலம் குரல் கொடுத்தவர் சிவராம்'

Princiya Dixci   / 2015 ஏப்ரல் 28 , பி.ப. 02:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

சிறுபான்மை சமூகங்களுக்காக தனது எழுத்தின் மூலம் குரல் கொடுத்தவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் ரி.சிவராம் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட், இன்று செவ்வாய்க்கிழமை (28) தெரிவித்தார்.

மட்டக்களப்பைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் தர்மரெத்தினம் சிவராமின் 10ஆவது ஆண்டு நினைவு தினம் நாளை புதன்கிழமை (29) அனுஷ்டிக்கப்படவிருக்கின்றது.

இதனையொட்டி நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே கிழக்கு மாகாண முதலமைச்சர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

எந்தவித தயக்கமும் அச்சமும் இன்றி சிறுபான்மை சமூகங்களுக்காக குரல் கொடுத்தவர் ஊடகவியலாளர் சிவராம். அவருடைய எழுத்துக்கள் கட்டுரைகள் மறக்கமுடியாதவை.

மக்களின் அபிலாஷைகள், பிரச்சினைகள், சிறுபான்மை சமூகங்களின் உரிமைகள் மற்றும் எதிர்பார்ப்புக்களை உலக நாடுகளுக்கு தைரியமாக ஊடகங்களின் மூலம் எடுத்துச் சொன்ன ஒரு சிறந்த ஊடகவியலாளர் சிவராம்.

அவர் மரணித்து பத்து ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் அவர் அன்று எதிர்பார்த்த ஊடக சுதந்திரம், இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் தலைமையிலான நல்லாட்சிக்கான ஆட்சியில் அமுல்படுத்தப்பட்டுள்ளது என்ற உண்மையை நாங்கள் காண்கின்றோம்.

அதேபோன்று மறைந்த ஊடகவியலாளர் சிவராம், தமிழ்த் தேசியத்துக்காக மிகவும் பாடுபட்டதுடன் தனது உயிரை அர்ப்பணிக்கும் அளவுக்கு குரல் கொடுத்த நல்ல மனிதர். அவரை நினைவு கூறும் வரலாற்றுக் கடமை எல்லோருக்கும் உண்டு என அவர் தெரிவித்தார்.

கொழும்பு பம்பலப்பிட்டியில் வைத்து இனந்தெரியாத குழுவினரால் 2005ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி இரவு, கடத்தப்பட்ட ஊடகவியலாளர் ரி.சிவராம், பின்னர் நாடாளுமன்றத்துக்கு அருகே, துப்பாக்கிச்சூட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .