Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2015 ஏப்ரல் 29 , மு.ப. 07:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவும் பொறாமை காரணமாகவும் முஸ்லிம் சமூகத்துக்காக காத்தான்குடியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நூதனசாலையை விமர்சிப்பதை முற்றாக தவிர்ந்து கொள்ளுமாறு காத்தான்குடி நகரசபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர், புதன்கிழமை (29) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையொன்றிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
'இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றையும் அவர்கள் இந்நாட்டுக்கு செய்த அளப்பரிய பங்களிப்புகளையும் வெளிக்கொணர்வதற்காக, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இலங்கை அரசாங்கத்தின் தொல்பொருள் திணைக்களத்தினூடாக காத்தான்குடியில் அமைத்த நூதனசாலை தொடர்பாகவும் அதில் வைக்கப்பட்டுள்ள உருவங்கள் தொடர்பாகவும் பல்வேறுபட்ட விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இலங்கை முஸ்லிம்களின் பூர்வீக வரலாறு தொடர்பாக கடந்த பல ஆண்டுகளாக ஜாதிக ஹெல உறுமய, பொதுபல சேனா, சிங்கள ராவய உட்பட பல பௌத்த அமைப்புக்கள் சிங்கள பேரினவாதிகள் தொடர்ச்சியாக விமர்சனங்கள் செய்து வருவதையும் நாம் அறிவோம்.
அண்மைக்காலமாக, சில பேராசியர்கள் முஸ்லிம்களுக்கு நூறு வருட கால வரலாறுகள் கூட இந்நாட்டில் இல்லை என்று சில ஆதாரங்களுடன் மாநாடுகளில் பேசியதையும் நாம் அறிவோம்.
பௌத்த சிங்கள மக்களுடைய பூர்வீகம், கலாசாரம் எவ்வாறு கண்டி நூதனசாலையில் பாதுகாக்கப்படுகின்றதோ, தமிழ் மக்களின் பூர்வீகமும் கலாசாரமும் யாழ்ப்பாண நூதனசாலையில் எவ்வாறு பாதுகாக்கப்படுகின்றதோ அவ்வாறு முஸ்லிம்களின் பூர்வீகம் கலாசாரத்தை பாதுகாக்க எமது முன்னோர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. எமது அடையாளம் தொடர்பான கற்களோ, பாவித்த பொருட்களோ, ஆவணங்களோ உரிய முறையில் பாதுகாக்கப்படவில்லை. அவைகள் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டன. கொழும்பு நூதனசாலையில் வைக்கப்பட்டிருந்த முஸ்லிம்களின் பூர்வீகம் தொடர்பான சில கற்கள் கூட அகற்றப்பட்டுவிட்டன.
இந்த அவசியத்தேவையை கருத்தில் கொண்டு முஸ்லிம்களின் பூர்வீக வரலாறை பாதுகாப்பதற்கான பொறுப்பை ஏற்ற முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ், கடந்த பல ஆண்டுகளாக எடுத்த முயற்சியின் பேரால் எமது காத்தான்குடி நகரசபை இந்நூதனசாலையை அமைத்தது.
இந்நூதனசாலையில் முஸ்லிம்களின் பூர்வீகத்தையும் வரலாற்றையும் காட்டுவதற்காகவும் எமது பங்களிப்புகளை எதிர்கால சந்ததியினர் புரிந்து கொள்வதற்காகவும் ஐக்கியத்தையும் சௌஜன்யத்தையும் ஏற்படுத்துவதற்காகவும் கல்வி நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டுமே உருவங்களும் பொம்மைகளும் வைக்கப்பட்டன.
ஒரு சமூகம் தன்னுடைய வரலாற்றையும் பூர்வீகத்தையும் உறுதிப்படுத்துவதற்காகவும் கல்வி நோக்கத்துக்காகவும் நூதனசாலைகளில் இவ்வாறு வைக்கமுடியும் என எமக்குக் கிடைத்த பத்வாவின் அடிப்படையிலும் சவுதி அரேபியாவைச் சேர்ந்த மார்க்க அறிஞர்களின் ஆலோசனையின் பேரிலும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை 2006ஆம் ஆண்டு வழங்கிய 009ஃயுஊதுருகுஃ2006ஆம் இலக்க பத்வாவின் அடிப்படையிலும் சவுதி அரேபியாவின் றியாத் தேசிய நூதனசாலை, தமாம் நூதனசாலை, ஜித்தா பூர்வீக நூதனசாலை, டுபாய், அபுதாபி, சார்ஜா, குவைத், பஹ்றைன், கட்டார் உட்பட பல்வேறுபட்ட இஸ்லாமிய அரேபிய நாடுகளின் நூதனசாலைகளில் இவ்வாறு நூற்றுக்கணக்கான சிலைகள் ஆண்டாண்டு காலமாக வைக்கப்பட்டதன் அடிப்படையிலுமே, காத்தான்குடி நூதனசாலையிலும் உருவங்கள், பொம்மைகள் வைக்கப்பட்டன.
எனினும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, காத்தான்குடி நூதனசாலையை பார்வையிடாமல், பொதுவான அடிப்படையில் வணங்குவதற்காகவோ அல்லது கண்ணியப்படுத்துவதற்காகவோ சிலைகள் அமைக்கக்கூடாதென்று கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக ஆராய்ந்து மார்க்க சம்பந்தமான ஆலோசனையை எமக்கு வழங்குவதற்காக சவுதி அரேபியாவைச் சேர்ந்த மார்க்க அறிஞர்களைக் கொண்ட குழுவொன்று மிக விரைவில் இங்கு வருகை தரவுள்ளனர்.
அவர்களின் ஆலோசனையின் பிரகாரம் மார்க்கத்துக்கு முரணான முறையில் ஏதாவது அம்சங்கள் இந்நூதனசாலையில் இருப்பின் அது தொடர்பாக தொல்பொருள் திணைக்களத்துடன் தொடர்பு கொண்டு அவற்றை நீக்கி, மார்க்கத்துக்கு உட்பட்ட வகையில் இந்நூதனசாலையை இயக்குவதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதை அறியத்தருவதோடு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவும் பொறாமை காரணமாகவும் முஸ்லிம் சமூகத்துக்கான இந்நூதனசாலையை விமர்சிப்பதை தவிர்ந்து கொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றேன் என்று அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
17 May 2025
17 May 2025