2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

உயர் கல்வி நிலையங்களிலிருந்து வெளியேறிச் செல்லும் மாணவர்கள் விழுமியங்களை பாதுகாக்கின்றவர்களாக இருக்க

Sudharshini   / 2015 ஏப்ரல் 29 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

உயர் கல்வி நிலையங்களிலிருந்து வெளியேறிச்செல்லும் மாணவர்கள் உயர் நிலைகளுக்கு செல்லும்போது, அவர்களால் அங்கு நல்ல சிந்தனைகள் விதைக்கப்பட்டு நல்ல விழுமியங்கள் பாதுகாக்கப்படுகின்ற நிலைமை உருவாகுமானால் அதனையே நாங்கள் சிறந்த வெளியீடாக பார்க்கின்றோம் என மட்டக்களப்பு உயர் தொழில்நுட்பட கல்வி நிறுவகத்தின் இணைப்பாளர் எஸ்.ஜெயபாலன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு ஆரையம்பதி,கோவில்குளத்தில் அமைந்துள்ள மட்டக்களப்பு உயர் தொழில்நுட்பட கல்வி நிறுவகத்தில் செவ்வாய்கிழமை (28) நடைபெற்ற சித்திரைப்புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,

நேபாள நாட்டில் மிகப்பெரிய பூகம்பம் இடம்பெற்றுள்ளது. இதில் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பலிகொள்ளப்பட்டுள்ளது. இந்த வேளையில் அவர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

ஒரு அனர்த்தம் வரும்போது ஒரு மதத்துக்கோ இனத்துக்கோ ஒரு சமூகத்துக்கோ வருவதில்லை. இந்த நாட்டில் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டபோது யாரும் நான் தமிழன், நான் முஸ்லிம், நான் சிங்களவன், நான் இராணுவம், நான் விடுதலைப்புலி என எண்ணவில்லை. மனிதன் என்ற எண்ணத்தினை தவிர அந்த நிலைமையில் வேறு எதுவும் அங்கு ஏற்படவில்லை. நாங்கள் இதனை நேரடியாக அனுபவித்தோம்.

அன்று சுனாமி இடம்பெற்ற வேளையில் உண்மையான அன்பு, காருண்யம், மனிதனுக்கு உதவிசெய்ய வேண்டும், எப்படியாவது காப்பாற்றவேண்டும் என்ற எண்ணமே இருந்தது. அந்தவேளையில் எந்தவிதமான கீழான எண்ணங்களையும் காணமுடியாத நிலையே இருந்தது. அனைவரும் அந்தவேளையில் ஒன்றுபட்டிருந்தார்கள்.

ஆனால், குறிப்பிட்ட சில நாட்களுக்கு பின்னர் நிவாரணப்பொருட்கள் கொண்டுவரப்பட்டபோது அங்கிருந்தவர்கள் குழுக்களை ஆரம்பித்து நிவாரணத்திற்கு முண்டியடித்தபோது அங்கிருந்த மனிதம் மறைந்து சென்றது. இதனை கண்டு நான் மிகவும் கவலையடைந்தேன்.

உண்மையில் நாங்கள் எங்கு பிரச்சினையை உருவாக்கிக்கொள்கின்றோம். எங்கு நாங்கள் மனிதம், கருணைக்கு அப்பால்பட்டு செயற்படுகின்றோம் என்றால் எங்களுக்கு கஷ்டம் வரும்போது. இன்னுமொருவரை கஷ்டப்படுத்தும் போது மனித உணர்வுகளிலிருந்து விலகி நிற்கின்றோம்.

இந்த நிகழ்வினை ஏற்பாடுசெய்த மாணவர்களிடையே எந்தவித வேறுபாட்டினையும் நான் காணவில்லை. கீழான சிந்தனையையோ வித்தியாசமான போக்கினையோ நான் இங்கு காணவில்லை.

அனைத்து மாணவர்களும் இனம் மதத்துக்கு அப்பால் இந்த நிகழ்வினை வெற்றிகரமாக நடாத்தவேண்டும் என்ற எண்ணத்திலேயே இருந்தார்கள். அதன் நோக்கத்திலேயே அவர்கள் ஒன்றுபட்டு செயற்படுகின்றனர். இவ்வாறான ஒற்றுமையே இன்று எமது பிரதேசத்துக்கும் தேவைப்படுகின்றது.

இங்கு 730 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயிலுகின்றனர். இவர்கள் குறிப்பிட்ட காலத்தின் பின்னர், வேறு ஒரு நிறுவனத்தில் உயர் நிலைக்கு செல்லும்போது அங்கு நல்ல சிந்தனைகள் விதைக்கப்பட்டு நல்ல விழுமியங்கள் பாதுகாக்கப்படுகின்ற நிலைமை உருவாகுமானால் அதனையே நாங்கள் சிறந்த வெளியீடாக பார்க்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு உயர் தொழில்நுட்பட கல்வி நிறுவகத்தின் இணைப்பாளர் எஸ்.ஜெயபாலன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் எஸ்.வாசுதேவன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

மட்டக்களப்பு உயர் தொழில்நுட்பட கல்வி நிறுவகத்தின் உயர் கணக்கியல் டிப்ளோமா மாணவர்கள் ஒன்றியம் மற்றும் உயர் கணக்கியல் டிப்ளோமா இரண்டாம் ஆண்டு முழு நேர பாடநெறியை மேற்கொள்ளும் மாணவர்கள் இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடுசெய்திருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .