2025 மே 17, சனிக்கிழமை

பொதுமக்களுக்கான குறைகேள் சேவை

Suganthini Ratnam   / 2015 மே 01 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் குறைநிறைகளை பொதுமக்கள் தன்னிடம் சமர்ப்பிப்பதையிட்டு தான் ஆர்வமும் அக்கறையும்  கொண்டுள்ளதாக அம்மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

இது தொடர்பில் இன்று வெள்ளிக்கிழமை  அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'கிழக்கு மாகாண முதலமைச்சர் பொதுமக்களின் தொலைபேசி அழைப்புக்கு பதிலளிப்பதில்லை என்று இணையத்தளங்களில் செய்திகள் உலாவருகின்றன. இது சிலர் வேண்டுமென்றே புனைந்து கூறுகின்ற வதந்திகள்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் என்ற வகையில் நான் பெற்றிருக்கும் பதவி மூலம்  கிழக்கில் உள்ள ஒவ்வொரு பொதுமகனும் தனது குறை நிறைகளை நேரடியாக என்னிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்பதில் நான் மிகவும் ஆவலலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கின்றேன்.

நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற ஒரு சில மாதங்களுக்குள்ளாகவே பொது மக்களிடமிருந்தும் பொது அமைப்புக்களிடமிருந்தும் கிடைக்கப்பெற்ற தீர்க்கப்படாமலிருந்த பல நீண்டகாலக் குறைபாடுகளைத் தீர்த்து வைத்திருக்கின்றேன்.

நாட்டுக்கே முன் மாதிரியாக எல்லா இனங்களும் அனைத்துக் கட்சிகளும் ஐக்கியப்பட்ட ஒரு ஆட்சி கிழக்கு மாகாணத்தில் நிறுவப்பட்டுள்ளது.

பொதுமக்கள் விடயத்தில் கவனம் அதிகம் செலுத்தியுள்ள காரணத்தினால் கிழக்கில் சகல பாகத்துக்கும் ஆட்களை நியமித்து அவர்கள் மூலம் கிழக்கில் ஒவ்வொரு மூலை முடுக்குகளில் இருக்கும் மக்களுடைய குறை நிறைகளையும் கேட்டு அதற்கான தீர்வுகளை வழங்குவதற்கு நிர்வாகத்தையும் பணித்திருக்கிறேன்.

தனிப்பட்ட முறையில் ஒருவர் தமது குறை நிறைகளை என்னிடம் சமர்ப்பிக்க விரும்பினால் எனது முகநூலினூடாக அதனை எனது கவனத்திற்குக் கொண்டு வரலாம்.

மக்களின் குறைகளைக் கேட்டறிதல் மற்றும் இதர சேவைக்காக பணிக்கப்பட்டவர்கள் உங்கள் அழைப்பை புறக்கணித்தால் எனது முகநூல் பக்கம் முறையிடலாம்.

கிழக்கில் வாழும் வறுமைப் பெண்கள் எவரும் வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களாகச் செல்லக் கூடாது என்பதனை உறுதிப்படுத்த வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழில் நிலையங்களை நிறுவ முயற்சித்து வருகிறேன்.

கடந்த 28ஆம் திகதி ஏறாவூரில் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான ஆடைத் தொழிற்சாலையின் பயிற்சி நிலையத்தை ஆரம்பித்து வைத்துள்ளேன்.

இதன் மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் முஸ்லிம் சிங்கள யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பு கிட்டப்போகின்றது.
இது போன்று அம்பாறை, திருகோணமலை, மாவட்டங்களில் பல பகுதிகளிலும் காணிகளை இனம் கண்டுவருகிறோம் அதற்கான வேலைகள் இவ்வருடம் முடியும் முன்னரே செய்து முடிக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

வறுமையின் காரணமாக பள்ளிப் படிப்பை இடை நிறுத்தி தொழிலற்றிருக்கும் இளைஞர், யுவதிகளுக்கு வருமானமீட்டும் வகையில் தொழில் வழங்க ஆயத்தமாக இருக்கிறேன்.

இதற்காக மாகாண சபையின் ஏனைய அமைச்சர்களும், உறுப்பினர்களும் என்னுடன் பக்கபலமாக இருப்பது பெரும் மகிழ்ச்சியையும் உந்துதலையும் அளித்திருக்கின்றது.

கிழக்கு மாகாணத்தில் எனது முதலமைச்சு ஆட்சிக்காலத்திற்குள் எல்லா சமூகங்களையும் சேர்ந்த  20 ஆயிரம் இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்புக்கள் வழங்க தீர்மானித்து அந்த முயற்சியில் இறங்கியிருக்கிறேன்.

இந்த முயற்சி வெற்றியளிக்க என்னுடன் அனைவரும் கைகோர்த்து உதவ வேண்டும் என்று இத்தருணத்தில் அனைவருக்கும் அன்பான அழைப்பையும் விடுக்கின்றேன்.

முக்கிய வேலைப் பளுக்களில் நான் ஈடுபட்டிருக்கும்போது எனது தொலைபேசி உங்களுக்குப் பதில் தரவில்லை என்றால் உடனே மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொடுக்க நியமிக்கப்பட்டவர்கள் மாவட்ட மட்டத்தில் இருக்கிறார்கள் அவர்களைத் தொடர்பு கொள்ளலாம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .