2025 மே 16, வெள்ளிக்கிழமை

பர்மிய முஸ்லிம்கள் மீதான அநீதியை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2015 மே 29 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்,வா.கிருஸ்ணா

பர்மா நாட்டில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை கண்டித்தும் அதற்கு எதிராக இலங்கை அரசாங்கம் கண்டனத்தை வெளியிட கோரியும் இன்று வெள்ளிக்கிழமை காத்தான்குடியில் ஆர்ப்பாட்டத்துடன் கூடிய  கண்டனப் பேரணி நடைபெற்றது.

தேசிய தவ்ஹீத் ஜமாஅத்தின் ஏற்பாட்டில் ஜும்ஆ தொழுகையின் பின்னர் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்திற்கு முன்பாக ஆரம்பமான இந்த கண்டன பேரணி காத்தான்குடி பிரதேச செயலகம் வரை சென்றது.

இந்த கண்டன பேரணியின் இறுதியில் தேசிய தவ்ஹீத் ஜமாஅத்தின் உப தலைவர் மௌலவி எம்.சி.ஹஸ்றான் ஜனாதிபதி மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கு அனுப்பி வைப்பதற்கான மகஜரொன்றையும்  காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசம்மிலிடம் கையளித்தார்.

பர்மா நாட்டில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை இலங்கை அரசாங்கம் கண்டிக்க வேண்டும், கடலில் தத்தளிக்கும் பர்மா முஸ்லிம்களுக்கு இலங்கை அரசாங்கம் உதவ வேண்டும், பர்மாவுடனான இராஜதந்திர உறவினை இலங்கை அரசாங்கம் துண்டிப்பதுடன் இலங்கை தனது தூதுவரை பர்மாவிலிருந்து மீள அழைக்க வேண்டும்  மூன்றம்சக் கோரிக்கைகள் அந்த மகஜரில் எழுதப்பட்டுள்ளன.

இந்த கண்டன பேரணியில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டதுடன் ஐ.நா.சபையே தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடு, மியன்மார் அரசே முஸ்லிம்கள் மீது கை வைக்காதே, இலங்கை ஜனாதிபதியே பர்மாவில் முஸ்லிம்களுக்கு நடக்கும் கொடுமைகளை கண்டியுங்கள் என்பன போன்ற வசனங்கள் எழுதப்பட்ட சுலோகங்களை பேரணியில் ஈடுபட்டோர் தாங்கியிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .