2025 மே 14, புதன்கிழமை

தாக்குதல் விவகாரம்; இருவருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 06 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-.எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளரையும் தேர்தல்கள் உத்தியோகஸ்தர்களையும் காத்தான்குடியில்  தாக்குவதற்கு  முற்பட்ட சம்பவம் தொடர்பில்  கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் மற்றும் காத்தான்குடி நகர சபையின் முன்னாள் தலைவரையும்  எதிர்வரும் 10ஆம் திகதிவரை விளக்கமறியல் வைக்குமாறு  மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதவான் என்.எம்.அப்துல்லாஹ் நேற்று வியாழக்கிழமை  உத்தரவிட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளரையும் தேர்தல்கள் உத்தியோகஸ்தர்களையும் தாக்குவதற்கு முற்பட்ட சம்பவம் தொடர்புடையதாகக் கருதப்படும்;; கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கே.எல்.எம்.பரீட்  மற்றும் காத்தான்குடி நகர சபையின் முன்னாள் தலைவர் எஸ்.எச்.அஸ்பரும் நேற்றையதினம்  காலை காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தனர். இதை அடுத்து, இவர்கள் இருவரையும் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதவான் என்.எம்.அப்துல்லாஹ் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே, நீதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் திங்கட்கிழமை (10) இந்தச்; சம்பவம் தொடர்பில் தேர்தல்கள் திணைக்களத்தின் அறிக்கை மற்றும் பொலிஸாரின் அறிக்கையையும்  நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் பொலிஸாருக்கு நீதவான்   உத்தரவிட்டுள்ளார்.

காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுக்கு ஆதரவு தெரிவித்து மகளிர் மாநாடு நடத்தப்படுவதாகவும் இதன்போது,  பெண்களுக்கு வெற்றிலைச் சின்னமும் வேட்பாளரின் இலக்கமும் பொறிக்கப்பட்ட தேநீர் கோப்பை உட்பட சில பொருட்கள் வழங்கப்படுவதாகவும் இது தேர்தல் சட்டத்தை மீறும் செயல் என்று மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர், மட்டக்களப்பு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் ஆகியோரிடம் சிலர் முறைப்பாடுகள் செய்திருந்தனர்.

இந்த முறைப்பாடுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.சசீலன் தலைமையிலான அதிகாரிகளைக் கொண்ட குழுவினர், விசாரணை செய்வதற்காக காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்துக்கு செவ்வாய்க்கிழமை (04)  சென்றிருந்தனர். இதன்போது, முன்னாள் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர்கள் இவர்களின் விசாரணைக்கு இடைஞ்சலை ஏற்படுத்தியிருந்தனர். அத்துடன், அங்கு சென்ற உதவித் தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.சசீலன் தலைமையிலான அதிகாரிகள் குழுவுக்கும் அவர்களுடன் சென்ற பொலிஸாருக்கும் தகாதவார்த்தைப் பிரயோகத்தை மேற்கொண்டதுடன், அவர்களை தாக்கவும் முற்பட்டுள்ளனர். இதனால், இங்கு அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் செவ்வாய்க்கிழமையே (04) முறைப்பாடு செய்திருந்தார்.  

இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும்  கிழக்கு மாகாண சபையின்  முன்னாள் உறுப்பினரையும் காத்தான்குடி நகர சபையின் தலைவரையும் கைதுசெய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துவந்த நிலையில்,  மேற்படி இருவரும் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .