2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

2020 ஜனவரி முதல் புதிய கிராமங்கள் ’5,000 உதயமாகும்

Editorial   / 2018 ஓகஸ்ட் 01 , பி.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

2020ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதியன்று, மேலும் 5 ஆயிரம் மாதிரிக் கிராமங்களை நிர்மாணிப்பதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன என, வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க வீடமைப்பு அபிவிருத்தித் திட்டத்தினூடாக, 2025ஆம் ஆண்டில், இந்நாட்டிலுள்ள அனைவரும், வீடொன்றுக்கான உரித்து​ரிமையைக் கொண்டிருப்பார்கள் என்றும், அவர் குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை - பட்டணமும் சூழலும் பிர​தேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாங்காயூற்றுப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட தெட்ஷணாபுரம், கைலாயபுரம் ஆகிய இரு மாதிரிக் கிராமங்களைத் திறந்துவைத்து, பயனாளிகளிடம் ஒப்படைத்த பின் உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சால் முன்னெடுக்கப்பட்டு வரும் "செமட்ட செவன" (அனைவருக்கும் நிழல் (வீடு)) எனும் வீடமைப்புத் திட்டத்தின் கீழான மாதிரிக் கிராமங்களின், 99ஆவது, 100ஆவது மாதிரிக் கிராமங்களே, இவ்வாறு கையளிக்கப்பட்டன.

இவற்றில், தெட்ஷணாபுரம் மாதிரிக் கிராமத்தில் 25 வீடுகளும், கைலாயபுரத்தில் 22 வீடுகளும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இவ்விரு கிராமங்களையும் முழுமையாக நிர்மாணித்து முடிப்பதற்கு, 47.5 மில்லியன் ரூபாய் செலவானதெனவும், வீடுகளற்ற பயனாளிகள் 47 பேருக்கு, இந்த வீடுகள் கையளிக்கப்பட்டுள்ளனவெனவம், இவற்றுக்கான காணிகள், இலவசமாகப் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளனவெனவும், நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் பிரேமதாச தெரிவித்தார்.
இந்த வீடமைப்புத் திட்டங்கள் இரண்டும், 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் திகதியன்று, தன்னுடைய பிறந்த தினத்தில் ஆரம்பிக்கப்பட்டன எனத் தெரிவித்த அவர், தனக்குக் கிடைத்த அமைச்சுப் பதவிகளைக் கொண்டு, நாடு முழுவதிலும் வீடமைப்புத் திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

தேவேந்திரமுனை முதல் பருத்தித்துறை வரை, நாடு முழுவதிலும் 964 மாதிரிக் கிராமங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளனவெனவும், இந்த எண்ணிக்கையை, அடுத்தாண்டு டிசெம்பர் 31ஆம் திகதிக்குள், 2,500ஆக அதிகரிப்பதே நோக்கமென்றும் ​குறிப்பிட்ட அமைச்சர், இதற்காக, மேலும் 1,536 கிராமங்களை நிர்மாணிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதெனவும் தெரிவித்தார்.

இதனடிப்படையில், 2020ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதியன்று, மேலும் 5 ஆயிரம் மாதிரிக் கிராமங்களை நிர்மாணிப்பதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளனவெனவும், இதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் முழுமையான ஒத்துழைப்புக் கிடைத்துள்ளனவெனவும், அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X