2025 மே 01, வியாழக்கிழமை

665 வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Super User   / 2014 ஜனவரி 08 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் நுகர்வோர் சட்டத்தினை மீறும் வகையில் செயற்பட்ட 665 வியாபாரிகளுக்கு எதிராக 2013ஆண்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட நுகர்வோர் அதிகார சபையின் பொறுப்பதிகாரி ஆர்.எப்.அன்வர் சதாத் தெரிவித்தார்.

இந்த சட்டத்தின் அடிப்படையில் நுகர்வோரை பாதிக்கும் வகையில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்ட வியாபாரிகளிடமிருந்து தண்டப்பணமாக 10 லட்சத்து 12 ஆயிரத்துத் 900 ரூபா அறவிடப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

மாவட்ட செயலாளர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸின் பணிப்பின் பேரிலேயே இந்த செயற்பாடு மேற்கொள்ளப்பட்டது என அவர் தெரிவித்தார்.

காத்தான்குடி, களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு நகர், ஏறாவூர், செங்கலடி, சித்தாண்டி, வாழைச்சேனை, ஓட்டமாவடி, வாகரை உள்ளிட்ட பிரதேசங்களில் நுகர்வோர் அதிகார சபையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் இவர்கள் மீது நீதிமன்றத்தின் ஊடாக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்தச் சுற்றிவளைப்புகளில் பொறுப்பதிகாரி ஆர்.எப்.அன்வர் சதாத் தலைமையில் கே.கரிதரன், என்.எம்.சப்ராஸ், ரி, சுதர்சன் போன்றோர் பங்கு கொண்டனர்.

அதே நரம், கடந்த வருடம் நுகர்வோருக்கும் வியாபாரிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வியாபாரிகள், பாடசாலை மாணவர்கள், அரச, அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் பங்கு கொள்ளும் வகையில் 52 நுகர்வோர் கருத்தரங்குகள் நடத்தப்பட்டுள்ளன.

இவற்றுக்குப் பொறுப்பாக ரிபுஸ்பானந்தி, கே.ரஜிதரன், எஸ்.ரதீஸ்ராஜா ஆகியோர் செயற்பட்டிருந்தனர்" என்றும் மாவட்ட நுகர்வோர் அதிகாரசபை பொறுப்பதிகாரி ஆர்.எப்.அன்வர் சதாத் தெரிவித்தார்.

இதேவேளை, நுகர்வோர் பாதுகாப்புக் குறித்து தகவல் தெரிவித்த மாவட்ட செயலாளர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ்,

"நுகர்வோரை பாதிக்கின்ற வகையில் பதுக்கல் வியாபாரம், குறிப்பிட்ட விலைக்கு மேலாக விற்பனை செய்தல், தரக்குறைவான பொருட்களை விற்பனை செய்தல் காலாவதியான பொருட்களை விற்பனை செய்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் வியாபாரிகளுக்கு எதிராக நீதிமன்றத்தின் ஊடாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே இவ்வாறான நடவடிக்கைகளை வியாபாரிகள் தவிர்த்து நுகர்வோரை பாதிக்காத வகையில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுதல் வேண்டும். அவ்வாறில்லாத பட்சத்தில் மிகவும் இறுக்கமான நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படும்" என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .