2025 மே 12, திங்கட்கிழமை

’800 விவசாயிகள் பாதிப்பு’

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2018 மே 31 , பி.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உன்னிச்சைக்குளத்தின் வான் கதவுகள், கடந்த 25ஆம் திகதி திடீரென திறந்து விடப்பட்டதன் மூலம், உன்னிச்சை நீர்ப்பாசனத் திட்டத்திலுள்ள 800 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 100 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதென, உன்னிச்சை நீர்ப்பாசனத் திட்டத்தின் திட்ட முகாமைக்குழுத் தலைவர் கந்தையா யோகவேல் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், நீர்ப்பாசனத் திணைக்களத்தின் ஒரு சில அதிகாரிகளின் பொறுப்பற்ற நடவடிக்கையே, இதற்கு காரணம் எனவும் குறிப்பிட்டார்.

இது தொடர்பில், ஊடகங்களுக்கு இன்று (31) கருத்துத் தெரிவித்த அவர், நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள் மீது, சரமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

வான் கதவுகள் திடீரெனத் திறந்து விடப்பட்டு, 15 அடி தண்ணீர் விடப்பட்டதன் மூலம், சுமார் 6,000 ஏக்கர் நெற்செய்கை பாதிக்கப்பட்டுள்ளதெனவும் குறிப்பிட்டார்.

15 அடி நீர், ஒரே தடவையில் வெளியேற்றப்பட்டமை, அப்பகுதி விவசாயிகளுக்குப் பாரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளதெனக் குற்றஞ்சாட்டிய அவர், இந்தப் போகத்துக்கான நெற்செய்கையின் நெற்பயிர்கள் அழிந்து போயுள்ளன எனவும் வயல் கட்டுகள் உடைந்து சேதமடைந்துள்ளன எனவும் தெரிவித்தார்.

“மகேஓயா, பதுளை போன்ற பகுதிகளில், அதிகளவு நீர் வீழ்ச்சி காணப்படுமாயின், அந்தத் தண்ணீர், காட்டுப் பகுதி வழியாக எமது பகுதிக்கு, இரண்டு நாள்களில் வந்து சேரும். ஆனால் உன்னிச்சையில் பெய்யும் மழை, எங்களைப் பெரிதாக தாக்காது. அந்த வகையில் கடந்த 19, 20ஆம் திகதிகளில் பதுளை, பண்டாரவளை போன்ற பிரதேசங்களில், கடும் மழை வீழச்சி காணப்பட்டது.

“இந்த நேரம் எமது உன்னிச்சைக்குளத்தில் 31.2 அடி தண்ணீர் காணப்பட்டது. அந்தத் தண்ணீரை குறையுங்கள். அதனை குறைத்து 28 அடி மட்டத்துக்குக் கொண்டு வாருங்கள் என, நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகளிடம் கூறினோம்.
“கடந்த 19, 20, 21ஆம் திகதிகளில் இந்த விடயத்தை, நாங்கள் கூறியும், அவர்கள் கணக்கெடுக்கவில்லை.

“25ஆம் திகதி அதிகாலை கூடுதலான தண்ணீர் போவதாகவும், மிக மோசமாகத் தண்ணீர் பரவுவதாகவும் அப்பகுதியிலுள்ள விவசாயிகள் தெரிவித்ததையடுத்து, அன்று அதிகாலை வேளையிலேயே அங்கு நான் செல்லும் போது, அப்பகுதி வீதிகள் வெள்ளத்தால் மூழ்கி காணப்பட்டதுடன், வீதிகள், விவசாய நிலங்கள் எல்லாம் ஒரே குளமாகவே காட்சி தந்தன” எனக் குறிப்பிட்டார்.

மிகவும் சிரமப்பட்டு உன்னிச்சைக் குளத்தடிக்குச் சென்ற போது, அங்கு நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அதிகாரிகளையோ, பொறியியலாளர்களையோ அல்லது காவலாளியையோ யாரையும் காணவில்லை எனக் குற்றஞ்சாட்டிய அவர், நீரை வெளியேற்றிவிட்டுச் சென்றிருக்கிறார்கள் என்பதை அப்போது தான் புரிந்துகொண்டதாகவும் தெரிவித்தார்.

"எனவே, பொறுப்பற்ற விதத்தில் நடந்து கொண்ட நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அதிகாரிகளை இடமாற்ற நடவடிக்கை எடுப்பதுடன், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈட்டுக் கொடுப்பனவுகளை வழங்க அரசாங்கம் முன் வரவேண்டும்" என, அவர் கோரிக்கை விடுத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X