2025 மே 07, புதன்கிழமை

’அடிநிலை கிராம மட்டங்களில் பெண்களின் நிலை மாற வேண்டும்’

Editorial   / 2020 ஜனவரி 31 , பி.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

 

சமுதாயத்தில் மறுமலர்ச்சி ஏற்பட வேண்டுமாக இருந்தால், அடிநிலை கிராம மட்டங்களில் பெண்களின் நிலை மாற வேண்டும் என்று, மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பின் பணிப்பாளர் சட்டத்தரணி மயூரி ஜனன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட கிராமங்களில் செயற்பட்டுவரும் கிராமமட்ட பெண்கள், யுவதிகளைக்கொண்ட செயற்குழுக்களுக்கான விழிப்புணர்வுப் பயிற்சி நெறி, தன்னாமுனை மியானி பயிற்சி நிலையத்தில், அந்நிறுவனத்தின் மாவட்ட உதவி இணைப்பாளர் தர்ஷினி ஸ்ரீகாந்த் தலைமையில், வியாழக்கிழமை (30) நடைபெற்றது.

அங்கு பயனாளிகளான பெண்கள், யுவதிகள் மத்தியில் தொடர்ந்து உரையாற்றிய அவர், அருவி பெண்கள் வலையமைப்பின் பணிப்பாளர் சட்டத்தரணி மயூரி, பெண்கள், கிராம மட்டங்களில் காணப்படும் பிரச்சினைகளை முன்னுரிமை அடிப்படையில் அடையாளம் காண்பதில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்றும் அவ்வாறு அடையாளங்கண்ட பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடிய மூலங்களை, அடையாளங்காண்பதும் முக்கியமாகும் என்று தெரிவித்தார்.

சமகால அரசியல் பொருளாதார போக்குகள் தொடர்பாகவும் பெண்களும் யுவதிகளும் அறிவு பெற்றிருக்க வேண்டும் என்றும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான சட்டத்தின் பாதுகாப்பையும் பெண்கள் அறிந்திருப்பது அவசியமாகும் என்றும் தெரிவித்தார்.

மனித உரிமைகள், பெண்கள் உரிமைகள், சிறுவர் உரிமைகள், அடிப்படை உரிமைகள் உட்பட அனைத்துவகை சட்டப் பாதுகாப்புப் பற்றிய விழிப்புணர்வுகளையும் பெற்றிருக்க வேண்டும் என்றும் அதனடிப்படையிலேயே, மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பு, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 10 பிரதேச செயலாளர் பிரிவுகளைத் தேர்ந்தெடுத்து மிகவும் அடிநிலையில் பாதிக்கப்பட்ட கிராமங்களாக இனங்கண்டு கொண்ட கிராமங்களில் 165கிராம மட்டக்குழுக்களை உருவாக்கியுள்ளது என்றும்  அதில் பெண்களும் யுவதிகளுமாக 2,595 உறுப்பினர்கள் செயற்பட்டு வருகின்றார்கள் என்றும் சுட்டிக்காட்டினார்.

“பெண்களை ஆற்றல் மிக்க குழுக்களாக நிலைப்படுத்துவதே, அருவி பெண்கள் வலையமைப்பின் இலக்காகும்” என்றார்.

இந்நிகழ்வில் வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் கே.லவகுகராசா, சிறுவர் நன்னடத்தை அலுவலர் ஆர்.விக்னேஸ்வரன் உட்பட இன்னும் சில வளவாளர்களும் அருவி பெண்கள் வலையமைப்புப் பணியாளர்களும் கலந்துகொண்டனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X