2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

அத்துமீறிய குடியேற்றவாசிகளை வெளியேற்றுமாறு வேண்டுகோள்

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 12 , மு.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

- வா.கிருஸ்ணா, பேரின்பராஜா சபேஷ்
 
மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி மற்றும் கிரான் பிரதேச செயலாளர் பிரிவுகளின் எல்லைக் கிராமங்களில் அத்துமீறிக் குடியேறியோரை உடனடியாக வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸுக்கு இன்று திங்கட்கிழமை அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.

அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'மேற்படி பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த பெரியமாதவணை, மயிலத்தமடு ஆகிய கிராமங்களில்  அண்மையில் பெரும்பான்மையினத்தோரின் அத்துமீறிய குடியேற்றம் இடம்பெற்றமை தொடர்பாக தமிழ் அரசியல்வாதிகள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதுடன், தங்களையும் அழைத்துச்சென்று காண்பித்துள்ளனர் என்பதை தாங்கள் அறிவீர்கள். அத்துடன், இது தொடர்பில் மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் பல தடவைகள் கலந்துரையாடப்பட்டன.  

ஆரம்பத்தில் இக்கிராமங்கள் வனபரிபாலனத் திணைக்களத்துக்குரியதாக தெரிவிக்கப்பட்டபோதும், தற்போது இவற்றில் பெரும்பகுதி மகாவலி அதிகாரசபைக்கும் சிறிய பகுதி வனபரிபாலனசபைக்கும் உரியதாக   அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அத்துமீறிக் குடியேறியோரை உரிய இடங்களிலிருந்து வெளியேற்றுவதை தெளிவுபடுத்தும் கூட்டம் அண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்றது. அக்கூட்டத்துக்கு தாங்களும் மேலதிக அரசாங்க அதிபரும் சமூகமளிக்கவில்லை என்பதை  அறிந்துள்ளேன். மாகாணக் காணிப் பகுதியினரும் மகாவலி அதிகாரசபை உட்பட்ட பகுதியினரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
 
இக்கூட்டத்தில் அத்துமீறிக் குடியேறியோரை மிக விரைவில் வெளியேற்றுவதாக உறுதி வழங்கப்பட்டதுடன், அதற்கான மீளாய்வுக் கூட்டம் 10  நாட்களில் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டதாக அறிகின்றேன். ஆனால், இதுவரையில்  நடத்தப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. எனவே, மீளாய்வுக் கூட்டத்தை மிக விரைவாக நடத்தி அத்துமீறி குடியேறியோரை வெளியேற்றும் நடவடிக்கையை துரிதப்படுத்தும் முகமாக மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையினருக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கின்றேன்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X