2025 மே 21, புதன்கிழமை

‘அபாரத் திறமையுடையவர் நஸீர்’ ; அமைச்சர் ஹக்கீம் பாராட்டு

Editorial   / 2017 ஒக்டோபர் 01 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்

 

“கிழக்கு மாகாண சபையின் இறுதி இரண்டரை வருடங்களில் ஆட்சிக்குத் தலைமையேற்று நடத்திய முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்டின் வகிபாகம் அபாரத் திறமையுடையதாக அமைந்திருந்தது” என, நகரத் திட்டமிடல் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணம் தழுவிய ரீதியில் அல்குர்ஆனை மனனம் செய்த 'ஹாபிழ்கள்' எனப்படுவோருக்கிடையில் நடத்தப்பட்ட போட்டி நிகழ்ச்சிகளிலிருந்து தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணப்பரிசில்களும் சான்றிதழ்களும் நினைவுச் சின்னங்களும் வழங்கும் நிகழ்வு, ஏறாவூர் குல்லியது தாரில் உலூம் அரபுக் கல்லூரி வளாகத்தில் நேற்று (30) இரவு நடைபெற்றது.

அங்கு பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்,

“பல்வேறு கொள்கைகளையுடைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய 4 கட்சிகளை உள்ளடக்கிய ஒரு தேசிய ஆட்சியைக் கொண்டு நடத்துவதென்பது லேசுப்பட்ட ஒரு காரியமல்ல.

“ஆனால், அதனை இலேசாகச் சாதித்து முடித்த பெருமை முதலமைச்ரைச் சாரும். பல சவால்களுக்கு முகங்கொடுத்த போதிலும் திறம்பட நடத்திக் காட்டியுள்ளார். அதற்காக அவரைப் பாராட்டியே ஆக வேண்டும்.

“அல்குர்ஆனைச் மனதிலே பதித்து அதனைச் சுமந்திருக்கும் இந்த நாட்டிலுள்ள ஆயிரக்கணக்கானவர்களை ஒன்று திரட்டி, அவர்களது நலன் பேணுவதற்கென்று ஓர் அமைப்பை உருவாக்கி, அவரகளை இந்த சமூகத்துக்குப் பயனுள்ளவர்களாக மாற்றுவதற்கு முதலமைச்சர் முன்னெடுத்திருக்கும் இந்தத் திட்டம் பாராட்டப்பட வேண்டிது.

“இப்படியான தனிப்பட்ட முயற்சிகளின் மூலம் செய்யப்படுகின்ற நிகழ்வுகளை முஸ்லிம் சமய விவகாரத் திணைக்களத்தையும் அரவணைத்துச் செய்து கொண்டால், அரச அங்கிகாரம் இருக்கும்.

“அரச அங்கிகாரம் என்பது கிடைக்கின்றபோது அதற்கொரு வலிமையும் பெறுமானமும் இருக்கும். அதேவேளை, வெளிநாடுகளிலிருந்தும் ஒத்தாசைகளும் கிடைக்கும்” என்றார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்டின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில், மாகாண மட்டத்தில் அல்குர் ஆன் ஓதல் போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற ஆண்களுக்கும் பெண்களுக்கும் முறையே ஒரு இலட்சம், 75 ஆயிரம், 60 ஆயிரம் ரூபாய் பணத் தொகையும், மாவட்ட மட்டத்தில் இதே அடிப்படையில் தலா 50 ஆயிரம், 40 ஆயிரம், 30 ஆயிரம் ரூபாய் பணத் தொகையும் பரிசாக வழங்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .