2025 மே 13, செவ்வாய்க்கிழமை

அம்மனடி அணைக்கட்டின் நிர்மாணப்பணிகள்: அதிகாரிகள் பார்வை

Gavitha   / 2016 மார்ச் 12 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஈரளக்குளம் பிரதேசத்தில் வண்ணாத்தி ஆற்றை மறித்து 24.7 மில்லியன் செலவில் அமைக்கப்பட்டுள்ள அம்மனடி அணைக்கட்டின் நிர்மாண வேலைகளை, மட்டக்களப்பு கமநல அபிவிருத்தித்திணைக்களப் பிரதி ஆணையாளர் பொறியியலாளர் எஸ்.சிவலிங்கம் உள்ளிட்ட மாவட்ட செயலக அதிகாரிகள் பார்வையிட்டனர்.

குறித்த அணைக்கட்டின் மூலம், இரு பக்கங்களிலுமுள்ள சுமார் 1,000 ஏக்கர் வேளாண்மை நிலங்கள், 800க்கும் மேற்பட்ட மேட்டு நிலப் பயிர்ச்செய்கைகளுக்குமான நிலங்களுக்கு நீரை வழங்க முடியும். அத்தோடு, கோடை காலங்களில் கால் நடைகளை வளர்ப்போர் நீரின்மையால் தூர இடங்களுக்கு கால் நடைகளைக் கொண்டு செல்லவேண்டிய நிலை இல்லாமல் செய்யப்படும். அதே நேரம், கோடை காலத்தில் நீரின்மையால் கால்நடைகள் பல இறக்கின்ற நிலையும் இதனால் இல்லாமல் செய்யப்படும்.

இந்த அணைக்கட்டுக்கு, இரைச்சகல், புழுட்டுமானோடை, விற்பனமடு, வெள்ளைக்கல் மலை, லாவாணை ஆறு போன்ற குளங்களின் ஊடாகக் கிடைக்கின்ற நீரானது, வண்ணாத்தி ஆற்றுடன் இணைந்து சந்தனமடு ஆற்றுக்கு சென்றுச் சென்றடைகின்றது.

1969ஆம் ஆண்டில் தற்போது புதிதாக அணைக்கட்டு அமைக்கப்பட்டதிலிருந்து 200 மீற்றர் தூரத்தில் ஏற்கெனவே ஒரு அணைக்கட்டு அமைக்கப்பட்டு கைவிடப்பட்ட நிலையில் இந்தப் புதிய அணைக்கட்டு அமைக்கப்பட்டுள்ளது.

இருந்த போதும் இதற்கான பாய்ச்சல் வசதிகளை மேற்கொள்வதற்கான வாய்க்கால்கள் அமைப்பதற்கான நிதி வசதிகள் தேடப்பட்டுக் கொண்டிருப்பதாக மட்டக்களப்பு கமநல அபிவிருத்தித்திணைக்களப் பிரதி ஆணையாளர் பொறியியலாளர் எஸ்.சிவலிங்கம் தெரிவித்தார்.

இதே நேரம், 125 ஏக்கர் வரை நீர்ப்பாசனம் செய்யக்கூடிய நவுண்டல்யமடு குளத்தின் அணைக்கட்டு வேலைகள் 12 மில்லியன் ரூபாய் செலவிலும் 200 ஏக்கர் வரை நீர்ப்பாசனம் செய்யக்கூடிய குருகணா மடு அணைக்கட்டு வேலைகள் 10 மில்லியன் செலவிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.


 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X