2025 மே 13, செவ்வாய்க்கிழமை

‘அரசாங்கத்தை திருட முற்பட்டோரை நாங்கள் விரட்டி அடித்துவிட்டோம்’

வா.கிருஸ்ணா   / 2019 பெப்ரவரி 12 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த வருடம் ஒக்டோபர் மாதத்தில், அரசியல் விபத்தொன்று நாட்டில் ஏற்பட்டதெனத் தெரிவித்த தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள் மற்றும் சமூகமேம்பாடு, இந்துசமய விவகார அமைச்சர் மனோ கணேசன், தங்களது அரசாங்கத்தைத் திருடுவதற்கு சில தரப்பினர் முயன்றனர் என்றும் அந்தக் கும்பலை, மக்களின் பலத்துடன் தாங்கள் விரட்டியடித்துவிட்டோம் என்றும் கூறினார்.

 அந்த அரசியல் விபத்தால், தனது அமைச்சின்  மூலமாக முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களில் சில தாமதங்கள் ஏற்பட்டுள்ளனவென சுட்டிக்காட்டிய அவர், தாமதமான பணிகளைத் துரிதப்படுத்துமாறு, அதிகாரிகளுக்குப் பணித்துள்ளேன் என்றும் கூறினார்.

அமைச்சின் ஊடாக, கடந்த ஆண்டுகள்  முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் இவ்வாண்டு மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்கள் தொடர்பில் ஆராயும் கூட்டம், மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று (11) நடைபெற்றது.

இந்துசமயம் தொடர்பான சில வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் வகையில் தேசிய இந்து சபையொன்றை அமைக்க, இந்தக் கூட்டத்தின் போது கவனம் செலுத்தப்பட்டதுடன், கிழக்கு மாகாணத்துக்கான மத்திய நிலையம் ஒன்றை மட்டக்களப்பில் அமைப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு, மட்டக்களப்பு மாவட்டத்துக்கு ஒதுக்கீடுசெய்யப்பட்ட 155 மில்லியன் ரூபாய் செலவில் முன்னெடுக்கப்படும் 57 திட்டங்கள் தொடர்பில், நேற்றைய கூட்டத்தில் ஆராயப்பட்டதுடன், முடிவுறாத வேலைத்திட்டங்களுக்கு, இந்த ஆண்டு நிதியொதுக்கீடுசெய்வது தொடர்பிலும் கவனஞ்செலுத்தப்பட்டது. அவ்வாறான திட்டங்களைத் துரிதப்படுத்துமாறு, அதிகாரிகளுக்கு, அமைச்சர் பணிப்புரை விடுத்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்பது போன்று, அரசியல் விபத்தால் அமைச்சரவை மாற்றப்பட்டு, தனக்கு அதிக பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்று தெரிவித்த அவர், எதிர்வரும் வரவு – செலவுத் திட்டத்துக்குப் பின்னர் வேறு வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படும் என்றார்.

“இந்துக்கள் வாழும் இடங்களில் இந்துக் கோவில்கள் அமைக்கப்படவேண்டிய தேவையுள்ளது. பிற மதத்தவர்கள் போன்று, இந்து மக்கள் வாழாத இடங்களில் அவர்கள் கோவில்களை அமைப்பதில்லை. கோவில்களை அமைத்து நாட்டையும் நிலத்தையும் நாங்கள் பிடிப்பதில்லை” என்றார்.

கடந்த காலங்களைப்போன்று, இந்து சமய விவகார அமைச்சு என்பது ஒரு தூங்கும் அமைச்சாக இருக்காது. கடந்த முறையிருந்த அமைச்சர் சிறப்பாக செயற்பட்டவர். எனினும், அவரது வேலைப்பழுக்கள் காரணமாக சிலவற்றை செய்யாமல் முடியாமல்போயிருக்கலாம் என்றார்.

சகோதர மதங்கள் கட்டமைப்புக்கொண்ட மதங்களாக இருக்கும்போது இந்து சமயம் கட்டுப்பாடுகள் இல்லாத மதமாக இருக்கின்றது” என்றுத் தெரிவித்த அவர், யாரும் எதையும் செய்யமுடியும் என்ற நிலையிருக்கின்றது. அதற்கு முடிவுகட்டவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

ஏனைய மதங்களுக்கு இருப்பதுபோன்று ஓர் ஒழுங்கமைப்பை கொண்டுவர நினைக்கின்றோம். அதன் அர்த்தம்,  மத விவகாரங்களில் அரசாங்கம் தலையிடுகின்றது என்பதல்ல என்றுத் தெரிவித்த அவர், அனைவரையும் ஒருங்கிணைத்து தேசிய ரீதியாக ஒரு கட்டமைப்பை உருவாக்க தீர்மானித்துள்ளோம். அது மாவட்ட மட்டத்திலும் செயற்படக்கூடியவாறு அமைக்கப்படும் என்றார்.

“இலங்கை தேசிய இந்து சபை என்னும் பெயரில் அந்தக் கட்டமைப்பு உருவாக்கப்படவுள்ளது. அதில் நான்கு பிரிவினர் பங்குபற்றுவர். மதகுருக்கள், ஆலய அறங்காவலர்கள், அறநெறி பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், இந்து அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட நான்கு பிரிவினரையும் ஒன்றாக இணைத்து, மாவட்ட ரீதியிலும் அந்தச் சபை ஏற்படுத்தப்படும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X