2025 மே 10, சனிக்கிழமை

அழைத்து விட்டு பேச மாட்டோம் என்பது நியாயமா?

Princiya Dixci   / 2022 மார்ச் 30 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

“அனைத்துத் தமிழ்க் கட்சிகளின் உறுப்பினர்களும் ஜனாதிபதி எங்களுடன் பேச வரவேண்டும் என்றே ஆர்ப்பாட்டம் செய்தோம். பேசவாருங்கள் என்று ஆர்ப்பாட்டம் செய்துவிட்டு, அவர் பேச்சுவார்த்தைக்குத் திகதி கொடுக்கும் போது பேச மாட்டோம் என்று சொல்வதில் என்ன நியாயம் இருக்கின்றது?” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேள்வியெழுப்பினார்.

மட்டு. ஊடக அமையத்தில் நேற்று (29) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு கேள்வியெழுப்பினார்.

மேற்படி ஊடக சந்திப்பில் சுமந்திரன் எம்.பி மேலும் தெரிவிக்கையில், “இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர், எங்களுடன் நடத்திய உரையாடலிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தை சம்மந்தமாக பேசினார்.

“இது சம்மந்தமாக எங்களுக்கு முன்னர் ஜனாதிபதியைச் சந்தித்ததாகவும், நாங்கள் தெரிவித்த விடயத்தை ஜனாதிபதி எற்கெனவே சொல்லியிருப்பதாகவும் உடனடி விடயங்கள் சம்மந்தமாக ஏற்பட்டிருக்கும் இணக்கப்பாடு அல்லது வாக்குறுதிகள் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று இந்தியாவுக்கு ஜனாதிபதி உறுதியளித்ததாகவும் எங்களுக்குத் தெரியப்படுத்தினார்.

“உடனடி விடயங்களில் நீண்டகால தமிழ் அரசியற் கைதிகளின் விடுவிப்பு சம்மந்தமாக நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

“நில அபகரிப்பு தொடர்பில் நீண்ட பேச்சுவார்த்தை நடத்தினோம். வெவ்வேறு சட்டங்களின் அடிப்படையில் எமது நிலங்கள் அபகரிக்கப்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு அவர்கள் இணங்கினார்கள்.

“அதற்கப்பால் நிர்வாக எல்லைகளை மாற்றுகின்ற முயற்சி நடைபெறுகின்றது. அது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். அதற்கான அறிவிப்பை தாம் உடனடியாக வழங்குவதாக ஜனாதிபதி தெரிவித்தார். இராணுவத் தேவைக்காகப் புதிய சுவீகரிப்புகள் செய்யப்படமாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டது.

“அத்துடன், போரால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு பிரதேசங்களுக்கென்று ஒரு விசேட அபவிருத்தி நிதியமொன்று உருவாக்குவதற்கு அரசாங்கம் இணங்கியிருக்கின்றது. அது எவ்வாறு என்ற விடயங்கள் இன்னும் பேசப்படவில்லை. இது தொடர்பில் எதிர்வரும் காலங்களில் பேசி முதலீட்டாளர்களை எவ்வாறு வருவிப்பது என்பது தொடர்பிலும் கலந்துரையாடுவோம்.

“இதற்கு மேலதிகமாக நாட்டின் தற்போயை பொருளாதார நிலைமைகள் குறித்து ஆராயும் முகமாக அனைத்துக் கட்சிகள் தொடர்பான கூட்டமொன்றும் நடைபெற்றது. பல எதிர்க்கட்சிகள் அதனைப் பகிஸ்கரித்தன. அரசாங்கத்தில் இருக்கும் இரு கட்சிகள் கூட இதனைப் பகிஸ்கரித்தன.

“ஆனால், இது அரசாங்கத்தைப் பொருத்த ஒரு விடயம் அல்ல. முழு நாட்டையும் மக்களையும் மிக மோசமாகப் பாதிக்கும் ஒரு விடயம். அந்த விடயத்தை அரசாங்கம் பார்த்துக் கொள்ளட்டும் என்று கூறி இருக்க முடியாது. பொறுப்பான ஓர் அரசியற் கட்சியாக;பான மக்கள் பிரதிநிதிகளாக இந்த விடயம் குறித்தும் அரசாங்கத்தோடு பேச வேண்டிய அத்தியாவசியத் தேவை இருந்தது.

“எனவே, நாங்கள் அதில் கலந்துகொண்டு, எங்கள் முன்மொழிவுகளை, சிபாரிசுகளைச் சொல்லியிருக்கின்றோம்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X