Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2018 மார்ச் 07 , மு.ப. 11:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
இனங்களுக்கிடையில் அமைதி சீர்குலைக்கப்பட்டு அழிவுகள் ஏற்படுத்தப்படும்பொழுது, அதிகாரத்திலுள்ளவர்கள் அமைதியாக வேடிக்கை பாரத்துக் கொண்டிருக்கக் கூடாது என, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமத் தெரிவித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பாக கிழக்கின் அம்பாறை நகரிலும், இந்த வாரம் மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தின் சில பகுதிகளிலும் முஸ்லிம்களைக் குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் தொடர்பில் கவனஞ் செலுத்தி, அவரால் நேற்று (06) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே, இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து, கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகாலம் ஆட்சி புரிந்ததை ஞாபகமூட்டிய அவர், அவ்வாட்சிக் காலத்தை, "மாகாண நல்லாட்சி" என வர்ணித்ததோடு, அக்காலத்தில் பிரதான மூன்று சமூகங்களுக்கிடையிலும், சிறிதளவு இனவிரிசல் கூட ஏற்பட்டிருக்கவில்லை என்று குறிப்பிட்டார். அந்த நிலைமைக்காக, ஆட்சியிலிருந்த இரண்டு பிரதான கட்சிகளும், அதிக சிரத்தை எடுத்துச் செயற்பட்டதோடு, அதிக தியாகங்களையும் மேற்கொண்டதாக, அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், மாகாண சபையின் காலம் முடிவடைந்து, மாகாணத்தின் ஆட்சி, ஆளுநரின் கீழ் வந்துள்ள நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள இனமுறுகல்களை, ஆட்சி மாற்றத்துடன் அவர் சம்பந்தப்படுத்திக் கருத்துத் தெரிவித்துள்ளார்.
"இப்பொழுது மாகாண சபை ஆட்சி முடிவுக்கு வந்து, அதிகாரம் ஆளுநர் கைகளுக்கு மாறியிருக்கின்ற நிலையில், ஏற்கெனவே மட்டக்களப்பு வாழைச்சேனையில் தமிழ் - முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலும், கடந்த வாரம் அம்பாறையிலும், தீய சக்திகள் இனவாதத்தை விதைத்து விட்டு, அதை நாடு பூராகவும் விரிவடையச் செய்வதற்கு முனைந்து நிற்கின்றன" என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து அவர், "கடந்த காலங்களில் இன அமைதியின்மையால் ஏற்பட்ட அழிவுகள், ஆதாரபூர்மாகக் கற்றுக் கொண்ட பாடங்களாக நம் கண் முன்னே இருக்கும்போது, இதனைக் கருத்திற்கொள்ளாது, அதிகாரமுள்ளவர்கள் கண்மூடித்தனமாக இருந்து கொண்டு வேடிக்கை பார்ப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது" என்றும் குறிப்பிட்டார்.
அப்பாவிப் பொதுமக்கள் பாதிக்கப்படும் போது, அந்தப் பாதிப்பை ஏற்படுத்தியோர், எந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பினும், அதிகாரத்திலுள்ளோர் தமது கடமையைச் சரிவரச் செய்ய வேண்டும் எனவும், பாரபட்சமின்றி, சட்டமும் ஒழுங்கும் சீர்குலையாமல் பாதுகாக்க வேண்டுமெனவும் அவர் கோரினார்.
அம்பாறையில் இடம்பெற்ற இனத்துவேசச் சம்பவங்களைத் திசைதிருப்புவதற்காக, கண்டியில் இடம்பெற்ற வன்முறைகள் அமைந்தன எனத் தெரிவித்த அவர், "இதற்கு, அதிகாரத்திலுள்ளோர் பதில் சொல்லியாக வேண்டும்" என்று தெரிவித்தார்.
“இத்தகைய நாசகார வேலைகளுக்கு இடமளிப்பது, நல்லாட்சி என்றே சொல்லுக்கே நல்லதல்ல. இனி வரும் சமுதாயம், இனங்களுக்கிடையிலான அழிவுகளிலிருந்து கற்றுக் கொள்வதற்கு, அதிகாரத்திலுள்ளளோர் வழிசமைத்துவிடக் கூடாது. இனவாதத்தைத் தூண்டுகின்ற எந்தவோர் இழிவான அரசியல் கலாசாரத்தையும், இளஞ் சந்ததிக்குக் கையளிக்கக் கூடாது” என்று, அவரது அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
8 hours ago