2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

இனப்படுகொலை என்று கூறுவதில் வெட்கப்படும் நிலை: யோகேஸ்வரன்

Gavitha   / 2016 செப்டெம்பர் 10 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

'மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் ஒரு இனப்படுகொலை. இன்று எங்களில் சிலர் கூட இனப்படுகொலை என்று கூறுவதில் வெட்கப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது' என்று மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் படுகொலை 26ஆவது ஆண்டு நிறைவையொட்டி நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வு, நேற்று வெள்ளிக்கிழமை (09) இடம்பெற்றது. இதில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

'சத்துருக்கொண்டான், கொக்குவில், பனிச்சையடி, பிள்ளையாரடி ஆகிய பகுதிகளில் வாழ்ந்த 186 பேர் படுகொலைசெய்யப்பட்ட தினத்தை 26 வருடங்களுக்கு பின்னர் உணர்வுபூர்வமாக வெளிப்படுத்திக்கொண்டுள்ளோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 90ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் பல இடங்களில் தமிழ் மக்கள் படுகொலைசெய்யப்பட்டுள்ளனர். இந்த படுகொலைகளின் சூத்திரதாரிகள் எவருக்கும் எதிராக இதுவரைக்கு எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை' என்று அவர் குறிப்பிட்டார்.

'சத்துருக்கொண்டான் படுகொலை எனப்படும் இந்த 186பேரின் படுகொலையானது, மிகவும் வேதனையான படுகொலையாகும். ஆறு மாதக்குழந்தைகள், சிறுவர்கள், முதியவர்கள் என்று வயது பாராது அருகில் உள்ள இராணுவ முகாமுக்கு அழைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்தப் படுகொலை மிகவும் கண்டிக்கத்தக்க படுகொலையாகவுள்ள நிலையிலும் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இந்தப் படுகொலை தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்பதில் நாங்களும் உறுதியாகவுள்ளோம்.

இந்தப் படுகொலைகளின் பின்னர் அது தொடர்பான விசாரணைகள் நடைபெற்றன. அந்த விசாரணை மூலம் குற்றவாளிகள் யார் என்று வெளிப்படுத்தப்பட்ட நிலையிலும் அந்த குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படாமல் மறைக்கப்பட்டுவிட்டது. வர்ணகுலசூரிய என்னும் இராணுவ அதிகாரியின் காலத்தில்தான் இந்தப் படுகொலைகள் செய்யப்பட்டுள்ளன அவர் சட்டத்தின் முன்பாக நிறுத்தப்பட்டு, அவருக்கு இதுவரையில் தண்டனை வழங்கப்படவில்லை' என்று அவர் சுட்டிக்காட்டினார்.

'தற்போது இந்த நாட்டில் நல்லாட்சி என்று கூறுகின்ற இந்த அரசாங்கம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற இனப்படுகொலைகள் தொடர்பில் துரிதவிசாரணைகளை மேற்கொண்டு இதனுடன் தொடர்புபட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனையை பெற்றுக்கொடுப்பதோடு, படுகொலை செய்யப்பட்ட குடும்பங்களுக்கு ஏற்ற வசதிகளைப்பெற்றுக்கொடுக்க முன்வரவேண்டும்.

சத்துருக்கொண்டான் படுகொலை நினைவுதினத்தை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் போன்றவர்கள் நடாத்தியிருந்தனர். ஆனால் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் இந்த நினைவுதினத்தன்று மட்டக்களப்பு பொலிஸை நிறுத்தி எமது மக்களின் ஜனநாயக உரிமையை, துன்பியல் நிகழ்வினை வெளிப்படுத்தும் தன்மை முடக்கப்பட்டது.

கடந்த ஆண்டும் இந்த ஆண்டு மட்டுமே சுதந்திரமாக தங்களது உறவுகளை நினைவுகூரும் சந்தர்ப்பம் கிட்டியுள்ளது. இருந்தபோதிலும் காலையில் இருந்து இப்பகுதியில் பொலிஸாரின் நடமாட்டம் அதிகமாக இருந்ததன் காரணமாக அச்சம் கொண்டு இந்நிகழ்வுக்கு பெரும்பாலான மக்கள் பங்குபற்ற முன்வரவில்லை. எமது மக்கள் தங்களது உறவுகளை நினைவுகூருவதை தடுப்பதற்கோ அவர்களை பயமுறுத்துவதற்கோ பொலிஸாருக்கு எந்த உரிமையும் இல்லை. எங்கள் மக்களுக்கு நடந்த துன்பத்துகு;கு நாங்கள் நீதி கோருகின்றோம். அது தொடர்பில் பொலிஸாருக்கு தொடர்பிருந்தால்தான் அச்சுறுத்தல் மேற்கொள்ள முடியும்' என்றும் அவர் இதன்போது உரையாற்றுகையில் தெரிவித்தார்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X