2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

’இனவாதம், மதவாதம் பேசுவோர் நாகரிகம் அற்றோர்’

வா.கிருஸ்ணா   / 2017 ஓகஸ்ட் 17 , பி.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

"இனவாதத்தையும் மதவாதத்தையும் பேசுகின்றவர்கள், நாகரிகமான மனிதர்களாக இருக்கமுடியாது" என, மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, மாவட்டத்தின் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 14 விளையாட்டுக் கழகங்கள், முதியோர் சங்கங்களுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு, பிரதேச செயலாளர் என்.குணநாதன் தலைமையில் மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில், நேற்று (16) காலை நடைபெற்றது.

இங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, "மற்றவர்கள் செய்யும் வேலைகளுக்கு நாங்கள் உரிமைகோர முடியாது. அவ்வாறான வேலைகளை நாங்கள் செய்வதில்லை. சிலர் பொய்யான கருத்துகளையும் தகவல்களையும் இணையத்தளங்கள் ஊடாக பரப்பிவருவதைக் காணமுடிகிறது.

இந்த நாட்டில் முஸ்லிம் இனம் பாதிக்கப்பட்டாலோ, தமிழர்கள் பாதிக்கப்பட்டாலோ அவர்களுக்காகக் குரல்கொடுக்க வேண்டியுள்ளது.

ஒருவரின் உரிமைகள் பறிக்கப்படும்போது தமிழ், சிங்களம், முஸ்லிம் என்று பார்ப்பதில்லை. தமிழர்களின் காணிகள் பறிக்கப்படும்போது அதற்கு குரல்கொடுக்கவேண்டும். அதேபோன்று சிங்கள, முஸ்லிம் மக்களின் காணிகள் பறிக்கப்படும்போதும் அதற்கும் குரல்கொடுக்கத் தயாராக இருக்கிறோம்.

எங்களைப் பொறுத்தவரையில் இனவாதிகள், மதவாதிகள் என்று நோக்கப்படாமல் நாங்கள் சரியாக நேர்மையாகப் பணியாற்றவேண்டும். இனவாதத்தையும் மதவாதத்தையும் பேசுகின்றவர்கள், நாகரிகமான மனிதர்களாக இருக்கமுடியாது.

கடந்த காலத்தில் சத்துருக்கொண்டானில் வீடமைப்பு ஒன்றை மேற்கொள்ள அதற்கான அமைச்சரிடம் நான் அனுமதியைப் பெற்றிருந்தபோதிலும் காணியை வழங்வதற்கு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் அப்போது இருந்த நிர்வாகம் போதிய ஒத்துழைப்பை வழங்கவில்லை.

ஊழல் மோசடிகள் இல்லாமல் பணியாற்றும் எந்த அதிகாரிகளையும் நான் உயர்வாக மதிக்கின்றேன். அவர்களுக்கான மரியாதையைத் தராளமாக வழங்குவதற்குத் தயராக இருக்கின்றேன். அதேபோன்று, இலஞ்சம், ஊழலுடன் மற்றையவர்களை ஏமாற்றும் வேலைகளை யாராவது செய்வார்களாயின், அதற்கெதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு நாங்கள் தயாராகவுள்ளோம்" என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .