Suganthini Ratnam / 2016 ஓகஸ்ட் 30 , மு.ப. 10:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா
'எமக்கு எதுவும் தேவையில்லை. எமது காணாமல் போன பிள்ளைகளையும் கணவர்மார்களையும் தந்தால் போதுமானது. அதற்கான நடவடிக்கையினை இலங்கையில் திறக்கப்படவுள்ள காணாமல் போனவர்களின் அலுவலகம் எடுக்கவேண்டும் என மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இயக்கங்களை சேர்ந்தவர்கள் என்ற கருத்து இருந்துவருவதாகவும் ஆனால் பொதுமக்களே காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்பதை அனைவரும் உணர்ந்துகொள்ளவேண்டும் எனவும் அவர்கள் கூறினர்.
இன்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு காந்தி பூங்காவுக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட காணாமல் போனவர்களின் உறவினர்கள் கலந்துகொண்டு தமது உள்ளக்குமுறலை முன்வைத்தனர்.
இதன்போது பண்டாரியாவெளியை சேர்ந்த வயோதிப பெண் கருத்து தெரிவிக்கையில், 'எனக்கு ஒரு மகளும் இரண்டு மகன்களும் இருந்தனர். மகளுக்கு சுகமில்லாத நிலையிலேயே இருந்துவருகின்றார். இந்த நிலையில் இரண்டு மகன்மாரும் காணமல் ஆக்கப்பட்டுவிட்டனர். இதன் காரணமாக நான் கஷ்டங்களை எதிர்கொண்டு வருகின்றேன். எனக்கு எதுவும் வேண்டாம். எனது பிள்ளைகள் இரண்டையும் கண்டுபிடித்து தந்தால்போதும். எங்களால் இனியும் அலையமுடியாது. எங்களுக்கு நீதி வேண்டும்' என்றார்.
இங்கு சித்தாண்டியை சேர்ந்த பெண்ணொருவர் கருத்து தெரிவிக்கையில், 'எனது மகன் 2006-11-30ஆம் திகதி மேசன் வேலைக்கு என்று சென்றவர் இதுவரையில் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் இதுவரையில் எனது மகன் கிடைக்கவில்லை. சாதாரணதரம் படித்துவிட்டு மேசன் வேலைக்கு சென்றவர்.11 வருடங்களாக நான் எனது மகனை தேடி வருகின்றேன். அவர் இருக்கின்றாரா, இல்லையா என்பது இன்னும் அறியமுடியாத நிலையிலேயே உள்ளேன். எமது நிலை தொடர்பில் விசாரணை நடத்துபவர்கள் தமிழ்மொழி தெரிந்தவர்களாக இருக்கவேண்டும். விசாரணை செய்பவர்கள் தமிழ் மொழியிலேயே நியமிக்கப்பட வேண்டும். அதற்கு மட்டக்களப்பில் உள்ள தமிழர்களையே நியமிக்கவேண்டும். காணாமல் போனவர்களை கண்டறியும் காரியாலத்தினை மட்டக்களப்பிலும் திறக்கவேண்டும். காணாமல் போனவர்கள் இயக்கங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கின்றார்கள். எமது பிள்ளைகள் எந்த இயக்கத்தினையும் சேராதவர்கள். வலுக்கட்டாயமாக கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்' என தெரிவித்தார்.
'கொக்கட்டிச்சோலையைச் சேர்ந்த பெண் ஒருவர் தெரிவிக்கையில், 'காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைக்கு வருமாறு கூறி அழைக்கப்பட்டோம். சென்றோம். பொலிஸில் இருந்து கடிதமும் கொண்டுவரச் சொன்னார்கள். இப்போது கடிதத்தில் மரணச்சான்றிதழ் அனுப்பப்பட்டுள்ளது. எமது பிள்ளைகள் எங்கு உள்ளது. அவர்களை மீட்டுத்தாருங்கள் என்றே நாங்கள் அங்கு சென்றோம். ஆனால் அவர்களினால் எங்களுக்கு மரணச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. எங்களுக்கு எதுவும் வேண்டாம் எனது பிள்ளையை உயிருடன் மீட்டுத்தாருங்கள்' என்றார்.
கொக்கட்டிச்சோலை முனைக்காடு பகுதியை சேர்ந்த சுகிர்தரன் புவனேஸ்வரி தெரிவிக்கையில், '2007ஆம் ஆண்டு கொக்கட்டிச்சோலை மாவடிமுன்மாரிப் பகுதிக்கு வயல் அறுவடைக்கு சென்ற எனது கணவர் இதுவரையில் வீடு திரும்பவில்லை. அவரை யார் கடத்திச்சென்றார்கள் என்பது கூட தெரியாது. அவர் இருக்கிறாரா, இல்லையா என்று தெரியாத நிலையில் எங்களுக்கு மரணச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. எனது மகனுக்கு 11வயது பூர்த்தியாகின்றது. ஆறாம் ஆண்டு கற்றுவருகின்றார். எனது தந்தையே எனது மகனுக்கு தேவையானவற்றை செய்துவருகின்றார். எனது கணவரின் நிலைமை தொடர்பில் தீர்க்கமான முடிவு ஒன்றை இந்த அரசாங்கம் வழங்கவேண்டும்' என்றார்.
30 minute ago
32 minute ago
40 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
32 minute ago
40 minute ago
49 minute ago