2025 மே 19, திங்கட்கிழமை

’உள்ளூராட்சிமன்றத் தேர்தல் முடிந்ததும் அரசாங்கத்தில் பாரிய மாற்றம்’

பேரின்பராஜா சபேஷ்   / 2018 பெப்ரவரி 01 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தலின் பின்னர், அரசாங்கத்திலும் அமைச்சரவையிலும் பாரிய மாற்றங்கள் ஏற்படுமெனத் தெரித்த இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸபுல்லாஹ், றவூப் ஹக்கீமின் அமைச்சுப் பொறுப்பிலும் மாற்றம் ஏற்படும் என்று தெரிவித்தார்.

மேலும், அடுத்த முறை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலிலும், தற்போது ஜனாதிபதியாக உள்ள மைத்திரிபால சிறிசேனவே, ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுவர் என்றும், அவர், இன்னும் எட்டு ஆண்டுகளுக்கு அதேபதவியை வகிப்பார் என்றும், அவர் மேலும் கூறினார்.

மட்டக்களப்பு ஏறாவூரில், நேற்று முன்தினம் (30) மாலை நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில், பிரதம பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். சுபைர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அவர் மேலும் உரையாற்றுகையில்,

“எதிர்வரும் தேர்தலின் பின்னர், பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அவருடைய பதவியிலிருந்து தூக்கி வீசப்படுவார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தனியான ஆட்சியை அமைக்கும். அதற்கான வேலைத்திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.

“முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீமின் அமைச்சுப் பொறுப்பு,  மாற்றப்பட்டு கிழக்கு மாகாண அபிவிருத்திக்கான முழுப்பொறுப்பும் என்னிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. ஜனாதிபதி, மாகாண நிர்வாகம், அரசாங்கம் உள்ளிட்ட அனைத்து விடயங்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வசமிருக்கும். அந்த அடிப்படையில்,  அதிகாரமுள்ளவர்களினால் தான் எமது பிரதேசத்தை அபிவிருத்தியினால் கட்டியெழுப்ப முடியும். எனவே ஆட்சி அதிகார தரப்பினருக்கே இத்தேர்தலில் வாக்களிக்கவேண்டும். 

“கடந்த 17 வருடங்களாக, வழங்கிவந்த வாக்குகளுக்கு, எமது சமூகம் எதையும் பெறாத நிலையில், தத்தளித்துக்கொண்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில், நாம், ஒன்றுபட வேண்டிய தேவை எமக்குள்ளது.  

“ஏறாவூர்ப் பிரதேசத்தில் பல தேவைகள் உள்ளன. அவற்றை நிறைவேற்றவேண்டிய பதவிகளையும் முதலமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அந்தஸ்தையும் வைத்திருந்தவர்கள் செய்யாததன் காரணமாகவே, எமது மக்களின் தேவைப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது” என்று இதன்போது அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X