2025 மே 21, புதன்கிழமை

ஊழியர் தாக்கப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

எஸ். பாக்கியநாதன்   / 2017 செப்டெம்பர் 22 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாநகரசபை ஊழியர் தாக்கப்பட்டதைக் கண்டித்தும் தாக்கியவரைக் கைதுசெய்யுமாறு கோரியும் மாநகரசபை ஊழியர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணி, மட்டக்களப்பு நகரில் இன்று (22) இடம்பெற்றது.

கடந்த மூன்று வாரகாலமாக, மாநகரசபையின் திருப்பெருந்துறை திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தில் கழிவுப் பொருட்களை கொட்டுவதற்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தால் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், கடந்த புதன்கிழமை (20) குறித்த தடை தற்காலிகமாக நீக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, மாநகரசபையால் சேகரிக்கப்பட்ட கழிவுகளை முகாமைத்துவம் செய்வதற்கு நேற்று (21)  சென்ற போது, அப்பிரதேச மக்கள் நீதிமன்ற உத்தரவை மீறி, கழிவுகளைக் கொட்டவிடாது தடுத்ததோடு, ஊழியர் ஒருவர் மீது  தாக்குதலும் நடாத்தினர்.

தாக்குதலுக்குள்ளான ஊழியர் வி.ஜெயராஜ் தலையில் காயமேற்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரைத், தாக்கியவரைக் கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு கோரியே மாநகரசபையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காந்திப் பூங்காலில் ஆரம்பமான பேரணி, மட்டக்களப்பு பொலிஸ் நிலையம் வரை சென்று மீண்டும் காந்திப் பூங்காவை வந்தடைந்ததன் பின்னர், கண்டன வாசகங்கள அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு கோஷமெழுப்பினர். இதனால் மாநகர சபையின் சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தன.

மட்டக்களப்பு மாநகர சபை ஊழியரைத் தாக்கினர் என்று கூறப்படும் நான்கு பேரைக் கைது செய்ய வேண்டும், எமது கடமைக்கு இடையூறாக இருக்க கூடாது. நீதிமன்றக் கட்டளைகளை மதித்து நடக்க வேண்டும், தாக்கப்பட்ட மாநகர சபை ஊழியர் ஜெயராஜுக்கு நீதி வேண்டும் என, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் வலியுறுத்தியதுடன் சுலோகங்களையும் தாங்கி நின்று கோசங்களும் எழுப்பினர்.

தாக்குதலுக்குள்ளான தொழிலாளியைக் கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு கோரிய மகஜரை, மாநகரசபையின் பிரதி ஆணையாளர் என்.தனஞ்செயன் உள்ளிட்ட 4 பேர் அடங்கிய குழுவினர், மட்டக்களப்பு பிரதிப் பொலிஸ்மா அதிபர் யாக்கொட ஆராய்ச்சியிடம் கையளித்ததும் கலைந்து சென்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .