2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

எரிசாராய உற்பத்தி நிலையத்தை திறப்பதற்கு அனுமதிக்கவும்

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 11 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்

மதுபானத் தாயாரிப்பின் பிரதான மூலப்பொருளாகிய எரிசாராய (எதனோல் -ஸ்பிரிட்) உற்பத்தி நிலையத்தை மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா, வேம்புக் கிராமத்தில்; திறப்பதற்கான அனுமதியளிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கிரான் றெஜி கலாசார மண்டபத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (9) நடைபெற்ற விசேட கூட்டத்தின்போது, பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கையெழுத்துடன் கூடிய மனு வாழைச்சேனை பிரதேச சபையின் செயலாளர் எஸ்.எம்.ஷிஹாப்தீனிடம் இன்று ஞாயிற்றுக்கிழமை கையளிக்கப்பட்டது.

அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'கல்குடா, வேம்புக் பிரதேசத்தில் மதுபானத் தயாரிப்போ, விற்பனையோ இடம்பெறப் போவதில்லை. இக்கிராமத்தில்; எரிசாராயத்தை உற்பத்தி செய்து கொழும்புக்கு குறித்த நிறுவனம்; எடுத்துச் செல்லவுள்ளது.

இந்நிலையத்தைத் திறப்பதால், பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. மாறாக, இங்குள்ள 250 க்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகளுக்கு இந்நிலையத்தில்; வேலைவாய்ப்புக் கிடைக்குமென்பதுடன், 1,000 க்கும் மேற்பட்ட குடும்பங்களும் நன்மையடையும். இதன் மூலம் இக்கிராமம் அபிவிருத்தி அடையுமென்ற எதிர்பார்ப்பும் உள்ளது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

'எரிசாராய உற்பத்திக்குத் தேவையான சோளம், நெல், அரிசி ஆகியவற்றை குறித்த நிறுவனம் இக்கிராம விவசாயிகளிடமிருந்து பெற்றுக்கொள்ளுமென்பதுடன், விவசாயிகளுக்கான மூலப்பொருள் உற்பத்தி ஊக்குவிப்பு நடவடிக்கையையும்; மேற்கொள்ளும்.

இந்த உற்பத்திக்கு சந்தைவாய்ப்புடன், கூடிய நியாய விலையும் கிடைக்கும் இதன் முதற்கட்டமாக மேட்டுநிலப் பயிர்ச்செய்கையாளர்கள் 200 பேருக்கு தண்ணீர் பம்பிகள் வழங்கப்படவுள்ளன' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'மேலும், எரிசாராய உற்பத்தி நிலையத்தைத் திறப்பதற்கான கட்டட அனுமதி கோரி கொழும்பிலுள்ள பிரசித்த நிறுவனமொன்று பிரதேச சபையிடம் விண்ணப்பம் செய்துள்ளபோதிலும், கடந்த பல மாத காலமாக கட்டடத்துக்கான அங்கிகாரம் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகிறது' எனவும் அம்மனுவில் கூட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
இது தொடர்பில் பிரதேச சபைச் செயலாளர் எஸ்.எம் ஷிஹப்தீனிடம் கேட்டபோது, 'கல்குடா, வேம்புக் கிராமத்தில் எரிசாராய உற்பத்தி நிலையத்தை திறப்பதற்கு கட்டட அனுமதி கோரி இவ்வருட முற்பகுதியில் கொழும்பிலுள்ள பிரசித்த நிறுவனமொன்று விண்ணப்பித்திருந்தது. எனினும், இதற்கான அங்கிகாரத்தை வழங்க வேண்டாமென்று கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் நாடாளுமன்றப் பிரதிநிதிகள் ஆலோசனை வழங்கியிருந்தனர்.

இருந்தபோதிலும், தற்போது தேசிய சுற்றாடல் அதிகாரசபை இக்கட்டடம் அமைப்பதற்காக சிபாரிசு செய்தள்ளது. இதனால்; இது குறித்த நடவடிக்கை  முன்னெடுக்கப்படும்' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X