2025 மே 01, வியாழக்கிழமை

‘ஒன்பது மாகாணங்களையும் அரசாங்கமே கைப்பற்றும்’

Editorial   / 2020 ஓகஸ்ட் 26 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

நடைபெறவிருக்கும் மாகாண சபைத் தேர்தலில், 08 மாகாண சபைகளை ஆளும் கட்சி கைப்பற்றும் எனவும் சிலவேளைகளில் ஒன்பது மாகாண சபைகளையும் அரசாங்கமே கைப்பற்றும் எனவும் தபால் சேவைகள், தொழில் அபிவிருத்தி, வெகுஜன ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்ற நிலை தவிடுபொடியாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட வீச்சுக்கல்முனை – சேத்துக்குடா வீதியை இரண்டு மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கும் பணிகளை, நேற்று (25) மாலை ஆரம்பித்துவைத்து உரையாற்றும் போதே, அவர் மேற்படி தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “மட்டக்களப்பு மாவட்டத்தில், நல்லாட்சி அரசாங்கத்தால் எந்தவிதப் பாரிய அபிவிருத்தியையும் நாங்கள் எதிர்பார்க்க முடியவில்லை. தற்போதைய பிரதமர், ஜனாதிபதியாக இருந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பெருந்தெருக்கள், பாலங்கள் போன்ற பல அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டன. அதன் பின்னர் வந்த ஐக்கிய தேசியக் கட்சியால் எதிர்பார்த்த எந்தவேலைத்திட்டங்களும் நடைபெறவில்லை” என்றார்.

தற்போதுள்ள அரசாங்கம் ஓர் உறுதியாக அரசாங்கம் எனவும் இந்தப் பலம்பொருந்திய அரசாங்கத்தில் கிழக்கு மாகாணத்தில் இருந்து ஓர் இராஜாங்க அமைச்சராக நாடுமுழுதும் சேவையாற்றும் வாய்ப்பு தனக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர், “இந்தச் சந்தர்ப்பத்தை நாங்கள் ஒருபோதும் வீணடித்துவிடமுடியாது” என்றார்.

எனவே, இந்தச் சந்தர்ப்பத்திலேயே, மட்டக்களப்பு மாவட்டத்துக்கும் கிழக்கு மாகாணத்துக்கும் அரசாங்கத்தால் பெற்றுக்கொள்ளக்கூடிய அதிகபட்ச நன்மைகளைப் பெற்று, எமது மக்களின் எதிர்பார்புகளைப் பூர்த்தி செய்ய வேண்டுமென்றார்.

“கடந்த காலங்களில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை நம்பி வாக்களித்த மக்களுக்கு உரிமையும் இல்லை; தீர்வும் இல்லை; அபிவிருத்தியும் இல்லை. இனிமேல் அரசியல்வாதிகள், மக்களை ஏமாற்ற நினைத்தாலும் மக்கள் ஏமாறுவதற்குத் தயார் இல்லையென்பதை அண்மைய தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன.

“தமிழ் மக்களை ஏமாற்றவேண்டுமென  நினைத்த பலர், இன்று அரசியலில் இருந்தே காணாமல்போய்விட்டனர். கூட்டமைப்பில் இருந்து வெளியேறினால், அரசியலே இல்லையென்று சிலர் கூறினர். இன்று அவர்களே அரசியலில் இருந்து காணாமல்போய்விட்டார்கள்” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .