2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

கைமுறை சிகிச்சை, பயிற்சி நிலையம் திறப்பு

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 28 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்,வா.கிருஸ்ணா,எம்.எஸ்.எம்.நூர்தீன்

கிழக்கு மாகாணத்தில் முதற்தடவையாக 'பாடும் கரங்கள்' எனும் பெயரில் விழிப்புலனற்றோரினால் நடத்தப்படும் கைமுறை சிகிச்சை மற்றும் பயிற்சி நிலையம் நேற்று  வியாழக்கிழமை மட்டக்களப்பு அரசடிச் சந்தி பார் வீதியிலுள்ள அரசடி பொது நூலகத்துக்கு மேல்மாடியில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

கனேடிய நாட்டு அரசாங்கத்தின் நிதி உதவியுடன் உலக கனேடியப் பல்கலைக்கழக சேவை நிறுவனத்தால் அமைக்கப்பட்ட மேற்படி கைமுறை சிகிச்சை மற்றும் பயிற்சி நிலையத்தை இலங்கைக்கான கனேடிய நாட்டு உயர்ஸ்தானிகர் ஷெலி விட்டிங்   உத்தியோகபூர்வமாக திறந்துவைத்துள்ளார்.

கனேடியப் பல்கலைக்கழக சேவை நிறுவனத்தின் கிழக்கு மாகாண அணித்தலைவர் எம்.யோகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிலைய திறப்பு விழா நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் எம்.உதயகுமார், உதயம் விழிப்புலனற்றோர் சங்கத்தின் தலைவர் பி.செல்வநாதன், மட்டக்களப்பு கல்வி வலய விசேட கல்விப் பிரிவுக்கான பணிப்பாளர் பி.தயானந்தா, அரசடி சித்த ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்தியர் டாக்டர் திருமதி.பி.பார்த்தீபன் உட்பட கிழக்கு சுற்றுலாத்துறை ஒன்றியம் சர்வதேச நிறுவனங்கள், கனேடிய பல்கலைக்கழக சேவை நிறுவனம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

மேற்படி நிலையத்தை அமைப்பதற்கு மட்டக்களப்பு மாநகர சபை, உதயம் விழிப்புலனற்றோர் சங்கம், கல்குடா, பாசிக்குடா சுற்றுலாத்துறை ஒன்றியம் போன்றவை பங்காளி நிறுவனங்களாக உதவி வழங்கியிருந்தது.

இங்கு திறந்துவைக்கப்பட்ட குறித்த கைமுறை சிகிச்சை மற்றும் பயிற்சி நிலையத்தில் கனேடிய பல்கலைக்கழக சேவை நிறுவனத்தினால் புலமைப்பரிசு வழங்கப்பட்ட ஆண், பெண் அடங்கலாக 15 விழிப்புலனற்ற மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு 4 மாதங்கள் கைமுறை சிகிச்சை பயிற்சி வழங்கப்பட்டு அதன் பின்னர் சுற்றுலா பிரயாணிகள், பொதுமக்கள் ஆகியோருக்கு இச்சிகிச்சை நிலையத்தில் கைமுறை சிகிச்சை வழங்கப்படவுள்ளது. இதன் மூலம் விழிப்புலனற்ற மற்றும் மாற்றுத்திறனாளிகள் தொழில் செய்வதற்கும் வருமானத்தை ஈட்டுவற்கும் வாய்ப்பாக அமைந்துள்ளது.

அத்தோடு குறித்த கைமுறை சிகிச்சை நிலையத்தில் ஆண்கள் ஆண்களுக்கும் பெண்கள் பெண்களுக்கும்; கைமுறை சிகிச்சை அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X