2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கோரிக்கைகள் செவிசாய்க்காவிடின் மாபெரும் போராட்டம்

Suganthini Ratnam   / 2016 ஜூலை 31 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் கோரிக்கைகளை அரசாங்கம் செவிசாய்க்காவிடின், ஒன்றிணைந்த பட்டதாரிகள் சங்கத்துடன் இணைந்து கொழும்பில் மாபெரும் போராட்டத்தை நடத்துவதற்கு தயாரென அம்மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் ரி.கிஷாந் தெரிவித்தார்.

வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரசாங்கம் உடனடியாக நியமனம் வழங்க வேண்டுமெனக் கோரி மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக்; கலாசாலை மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் கையெழுத்துப் போராட்டம் நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், '2012ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் இதுவரையில் வெளியான பட்டதாரிகள் மாத்திரம் 1,500 பேர் வேலைவாய்ப்பின்றி உள்ளனர். பல்வேறு சந்தர்ப்பங்களில் ஜனாதிபதி, பிரதமர், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஆகியோரால் இப்பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டபோதும்,  அது தொடர்பில் முயற்சி எடுக்கப்படுவதாக எமக்குத் தெரியவில்லை.

வேலைவாய்ப்பை விரைவாக வழங்குமாறு கோரி கடந்த வருடம் பிரதமருடன் கலந்துரையாடல் நடைபெற்றது. இதன்போது, வேலைவாய்ப்புப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் குழு அமைக்கப்பட்டது. அக்குழுவும் தற்போது சரியான முறையில் செயற்படுவதாகத் தெரியவில்லை' என்றார்.

'பட்டதாரிகள் மீதான இந்த அரசாங்கத்தின் அலட்சியமான செயற்பாடு, வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்வதற்கான போராட்டங்களை மேற்கொள்ளவேண்டிய நிலைக்கு பட்டதாரிகளை கொண்டுசெல்கின்றது. நாடு பூராகவும் வேலைவாய்ப்புக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்றபோதும், அவ்வெற்றிடங்களுக்கு வேலையற்றுள்ள  பட்டதாரிகளை நியமித்து பூர்த்திசெய்யாமை கவலையளிக்கின்றது.

எனவே, சகல வேலையற்ற பட்டதாரிகளுக்கும் அரசாங்கம் உடனடியாக நியமனம் வழங்க வேண்டுமென்பதுடன், முதலில் வயது கூடிய  பட்டதாரிகளை கவனத்திற்கொண்டு;  அவர்களுக்கு நியமனம் வழங்க வேண்டும். கிழக்கு மாகாணத்தில் நிலவுகின்ற ஆசிரியர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகஸ்தர் வெற்றிடங்களை உடனடியாக நிரப்புமாறும் அதற்கான நிதியை ஒதுக்குமாறும்; கேட்டு;க்கொள்கிறோம்' எனவும் அவர் மேலும் கூறினார்.

இங்கு பெறப்பட்ட கையெழுத்துகளுடன் மகஜர் ஜனாதிபதி, பிரதமர், நிதியமைச்சர் ஆகியோருக்கு வழங்குவதற்காக அகில இலங்கை ஒன்றிணைந்த பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் தம்மிக முனசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X