2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

‘கருணா மீது விசாரணை நடத்தப்பட வேண்டும்’

Editorial   / 2017 ஓகஸ்ட் 14 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ. ஹுஸைன்

“கடந்த ஆயுத வன்முறைக் காலத்தில், கிழக்கில் இனப்படுகொலை புரிந்து, முஸ்லிம் சமூகத்தை அழிக்க நினைத்து, திட்டம் வகுத்து, அதனை தலைமை தாங்கி நடத்திய “கருணா” எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் மீது, விசாரணை நடத்தப்பட வேண்டும்” என, கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் விடுத்தார். 

1990ஆம் ஆண்டு ஏறாவூர் நகரிலும் அதனை அண்டிய கிராமங்களிலும், ஒரே இரவில், வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்தோர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட ஸுஹதாக்களின் (சொர்க்க வாசிகள்) 27ஆவது நினைவு நிகழ்வு, ஏறாவூரில் படுகொலை செய்யப்பட்டவர்கள் அடக்கம் செய்யப்பட்ட காட்டுப்பள்ளி மஸ்ஜிதுந் நூறுஸ் ஸலாமில், நேற்று முன்தினம் இடம்பெற்றது. 

இதில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர்,  

“கிழக்கு மாகாணத்தில் யுத்த காலத்தில் முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைகளைத் திட்டம் தீட்டி, தலைமை தாங்கி வழிநடத்தி செய்து முடித்தவர் எல்.ரீ.ரீ.ஈ இயக்கத்தின் கிழக்குத் தளபதியாக இருந்த கருணா எனப்படும் முரளிதரன் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. 

“மனித உரிமை ஆர்வலர்கள், புலனாய்வுப் பிரிவினர் ஆகியோர், இந்த விடயத்தில் கருணாவின் கடந்தகால நடவடிக்கைகளை நன்கு அறிவர். 

“சம காலத்தில் முஸ்லிம்களைப்பற்றி கருணா வெளியிடும் கருத்துகள், கருணா ஆயுதபலத்தோடு இருந்த காலத்தில் எவ்வாறு முஸ்லிம்கள் மீது இனப்படுகொலைகளைச் செய்திருப்பார் என்பதற்குத் தக்க சான்றாக அமைந்துள்ளன. 

“அன்று எவ்வாறு முஸ்லிம்களைக் கிழக்கிலிருந்து அழித்தொழிக்க முயன்றாரோ, அதனையே தற்போதும் மாற்று வழிகளில் செய்து வருகின்றார். 

“பகிரங்கமாகவே படுகொலை புரிந்த கருணாவின் நடவடிக்கைக்காக, தமிழ் சமூகத்தைப் பழிவாங்கவோ பகைத்துக் கொள்ளவோ, பாரபட்சம் காட்டவோ முஸ்லிம் சமூகம் ஒருபோதும் முயன்றதில்லை. 

“எனவே, முஸ்லிம் - தமிழ் சமூக உறவைச் சீரழிக்க நினைக்கின்ற கருணா போன்ற துரோகிகளுக்கு, காலம் தக்க பதிலளிக்கும்” என்றார்.  

1990ஆம் ஆண்டு ஓகஸ்ட் 11 ஆம் திகதி இரவு, ஏறாவூரிலும் ஏறாவூரைச் சூழவுள்ள ஆற்றங்கரை, ஓட்டுப்பள்ளி, புன்னைக்குடாவீதி, ஐயங்கேணி, மீராகேணி, சத்தாம்ஹுஸைன் ஆகிய கிராமங்களிலும், ஏககாலத்தில் 121 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள். 

அதேவேளை அந்தப் படுகொலைத் தாக்குதலின்போது படுகாயமடைந்த பலர், பின்னாட்களில் சிகிச்சை பயனளிக்காமல் இறந்து போனார்கள். ஒட்டுமொத்தமாக இச்சம்பவங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 160க்கும் மேல் என, சமூக ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .