2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

கிரான் விக்டர் அணைக்கட்டு புனரமைப்பு

Editorial   / 2017 ஓகஸ்ட் 19 , பி.ப. 02:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா சபேஷ், கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று தெற்கு (கிரான்) பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பேரில்லாவெளி கிராம சேவையாளர் பிரிவின் முல்லிப்பொத்தானை விவசாயக் கண்டத்தின் விக்டர் அணைக்கட்டு புனரமைப்புச் செய்வதற்காக அடிக்கல் நாட்டு நிகழ்வு, கமநலசேவைகள் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதி ஆணையாளர் நடராஜா சிவலிங்கம் தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை (18) மாலை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண விவசாய மற்றும் நீர்ப்பாசன அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் கலந்துகொண்டதுடன், கமநல சேவைகள் திணைக்களத்தின் பிரதம பொறியியலாளர், கிழக்கு மாகாண விவசாய அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் தங்கவேல், பிரதேச கமநல சேவைகள் உத்தியோகஸ்தர் மற்றும் விவசாயிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

முள்ளிப்பொத்தானைக் கண்ட விவசாயிகளால் பல வருடங்களாக பலரிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோள் இறுதியில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டு கிழக்கு மாகாண விவசாய அமைச்சரால் மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் மூலமாக மத்திய அமைச்சால் மேற்படி அணைக்கட்டினை புனரமைப்புச் செய்வதற்காக 3.5 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதன் ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் கிழக்கு மாகாண விவசாய அமைச்சரால் ஆரம்பித்துவைக்கப்பட்டன.

இதன் போது அமைச்சர் கருத்துத் தெரிவிக்கையில்,

“இன்றைய இந்த செயற்றிட்டத்தின் மூலம் இந்த விக்டர் அணைக்கட்டானது புனரமைப்புச் செய்யப்பட்டு, இதன்மூலம் இப்பிரதேசத்தில் இருக்கின்ற 400 ஏக்கர் அளவிலாள நெல் வயலுக்கு நீர்ப்பாய்ச்சக் கூடிய நிலைமை ஏற்படும்.

“இவ்வேலைத்திட்டம் விவசாய விரிவாக்கல் திணைக்களத்தால்ல் மத்திய அரசாங்கத்தின் நிதியைப் பெற்று  மேற்கொள்ளப்படுகின்றது.

“இது தொடர்பான விடயங்களை நாம் மத்திய அமைச்சோடு அணுகி செயற்பாடுகளை மேற்கொண்டோம். இத்தோடு, 47 வகையான செயற்றிட்டங்களுக்கான அனுமதியை மத்திய அரசாங்கம்  வழங்கியிருக்கின்றது. அந்தவகையில், அதற்கான நிதிகளையும் வழங்குவதாக அமைச்சர் தெரிவித்திருக்கின்றார்.

“இந்த விடயத்தின் ஊடாகத்தான் இந்த அணைக்கட்டுத் தொடர்பான செயற்பாடும் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. இதற்கு மட்டக்களப்பு மாவட்ட பிரதி ஆணையாளர் அவர்களும் பாரிய பங்கினை மேற்கொண்டார்.  இதனைத் தொடர்ந்து இதன் பக்க வாய்க்கால்களால்  நீர் பாய்வதாகவும் இதனை அடைத்து தருவதற்கான கோரிக்கையும் விவசாயிகளால் முன்வைக்கப்பட்டது. அதனையும் எம்மால் முடிந்தளவில் நிறைவேற்றிக் கொடுப்போம்” எனத் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .