2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

’கிழக்கு பல்கலை போராட்டத்துக்கு கலை, கலாசார பீடம் ஆதரவில்லை’

Editorial   / 2017 ஓகஸ்ட் 17 , பி.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா சபேஷ், ஏ.எச்.ஏ. ஹுஸைன், கே.எல்.ரி.யுதாஜித்

கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களின் ஒரு பிரிவினரால் முன்னெடுக்கப்படும் போராட்டங்களுக்கு, கலை, கலாசார பீட மாணவர்கள் எவ்வித ஆதரவும் வழங்கவில்லை எனவும் இடைநிறுத்தப்பட்ட தமது கல்வி நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறும் கலை, கலாசார பீட மாணவர் ஒன்றியம், கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை மற்றும் இந்த நிலைமை தொடர்பாக, கலை, கலாசார பீட மாணவர் ஒன்றியத்தின் நிலைப்பாடு தொடர்பாக, மாணவர் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.டினேஸ்காந் மற்றும் செயலாளர் ரி.பவித்ராஜ் ஆகியோர் கையொப்பமிட்டு, புதன்கிழமை (16) மாலை உபவேந்தருக்கு அனுப்பிவைத்துள்ள கடித்திலேயே இவ்வாறு குறிப்பிட்டிருந்தது.

அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,"கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை, கலாசார பீடம் தவிர்ந்த ஏனைய பீடங்களிலுள்ள ஒரு தரப்பு மாணவர்களால், கடந்த 08ஆம் திகதி தொடக்கம் பல்கலைக்கழக நிர்வாகக் கட்டிடம் முற்றுகையிடப்பட்டு நிர்வாக நடவடிக்கைகள் இன்றுவரை சீர்குலைந்து காணப்படுகிறது.

இச்செயற்பாடுகளுக்கு கலை, கலாசார பீட மாணவர்களினால் எவ்வித ஆதரவும் வழங்கப்படவில்லை. இருந்த போதும் இச்செயற்பாட்டுக்கு கலை, கலாசார பீட மாணவர் ஒன்றியத்தின் ஆதரவும் வழங்கப்பட்டிருப்பதாக கடந்த 13ஆம் திகதி நடாத்தப்பட்ட ஊடக சந்திப்பின் போது அனைத்து மாணவர் ஒன்றியத் தலைவரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறான ஒரு செய்தியாகும்.

இவ்வாறான செயற்பாட்டுக்கு எமது கலை, கலாசார பீடத்தால் எவ்வித ஆதரவும் வழங்கப்படாத போதிலும் கலைப் பீடத்தின் கல்வி நடவடிக்கைகள் முற்றாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. எனவே, கலை, கலாசார பீட மாணவர்களின் எதிர்கால கல்வி நடவடிக்கைகளைக் கருத்திற் கொண்டு உடனடியாக கலை, கலாசார பீடத்தினுடைய கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்" என அந்த கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .