2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

சிசுவின் சடலம் மீட்பு; பெண் கைது

Suganthini Ratnam   / 2016 ஜூலை 03 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்

மட்டக்களப்பு ஏறாவூர், மீராகேணிப் பிரதேசத்தில் அமைந்துள்ள அநாதை இல்லம் ஒன்றின் வளாகத்தில் வாழைமரங்களுக்கு இடையில்  கைவிடப்பட்ட நிலையில் 07 மாதச் சிசுவின் சடலம் ஒன்றை சனிக்கிழமை (02) இரவு மீட்டதுடன், அச்சிசுவை பிரசவித்ததாகச் சந்தேகிக்கப்படும் பெண் ஒருவரைக் கைதுசெய்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
 
கடந்த ஒரு மாதகாலமாக குறித்த அநாதை இல்லத்தில் குடும்பத்தவருடன் தங்கியிருந்து சமையல் பணியில் ஈடுபட்டுவந்த இப்பெண்ணைக் கைதுசெய்த பின்னர், சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் பொலிஸார் கூறினர்.
 
இப்பெண்ணின் வயிறு வழமைக்கு மாறாக பெரிதாகக் காணப்பட்டபோது, அது தொடர்பில் கணவர் விசாரித்துள்ளார். வயிற்றில் கட்டி உள்ளதாக வைத்தியப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது என அப்பெண் கூறியுள்ளார்.

சம்பவதினமான சனிக்கிழமை இப்பெண்ணுக்கு அதிக இரத்தப் பெருக்கு காணப்பட்டதை அவதானித்த கணவன்,
ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தார். இப்பெண்ணுக்கு வைத்தியப் பரிசோதனை மேற்கொண்டபோது, சிசுவைப் பிரசவித்துள்ளமை தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் தமக்கு குறித்த அநாதை இல்ல முகாமையாளர் தகவல் வழங்கியதைத் தொடர்ந்து சந்தேக நபரைக் கைதுசெய்ததாகவும்; பொலிஸார் கூறினர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X