2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

சுரவணையடியூற்றுக் கிராமத்தில் ஆரம்பப் பாடசாலை வேண்டும்

Suganthini Ratnam   / 2016 ஜூலை 07 , மு.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

மட்டக்களப்பு, பட்டிருப்புக் கல்வி வலயத்துக்கு உட்பட்ட சுரவணையடியூற்றுக் கிராமத்தில் ஆரம்பப் பாடசாலை ஒன்றை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கையை முன்னெடுக்குமாறு அக்கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

170க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இக்கிராமத்தில் ஆரம்பப் பாடசாலை இல்லாமையால், இங்குள்ள மாணவர்கள்  தொலைவில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்று வருகின்றனர்.

இக்கிராமத்தில் ஆரம்பப் பாடசாலைக்காக கிராமவாசிகளினால் காணி ஒதுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அக்காணியில் தன்னார்வ தொண்டர் அமைப்பு ஒன்றின் ஏற்பாட்டில் சிறிய கட்டடம் அமைக்கப்பட்டது. இக்கட்டடத்தில் ஆரம்பப் பாடசாலையை ஆரம்பிப்பதற்கான முயற்சியை மேற்கொண்டபோதிலும், அது இதுவரையில் கைகூடவில்லை என அக்கிராம மக்கள் தெரிவித்தனர்.

எனவே, கல்வித்துறை சார்ந்த அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் இணைந்து இக்கிராமத்தில் இந்த வருடத்துக்குள் ஆரம்பப் பாடசாலையை ஆரம்பிப்பதற்கு  முன்வர வேண்டும் என அக்கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இக்கிராமத்தில் ஆரம்பப் பாடசாலையை ஆரம்பிப்பது தொடர்பில் பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் நகுலேஸ்வரி புள்ளநாயகத்திடம் கேட்டபோது, 'சுரவணையடியூற்றுக் கிராமத்தில் ஆரம்பப்  பாடசாலை ஒன்றை ஆரம்பிப்பது தொடர்பில் அக்கிராமவாசிகள் எம்முடன் தொடர்புகொண்டிருந்தனர். பின்னர் இது தொடர்பில் எந்த வேண்டுகோளும் முன்வைக்கப்படவில்லை.

ஆயினும், பட்டிருப்பில் அமைந்துள்ள எமது வலயக் கல்வி அலுவலகத்; திட்டமிடல் பகுதிக்கு கடமை நாட்களில் வருகைதந்து  பாடசாலை ஆரம்பிப்பதற்குரிய விண்ணப்பப்படிவத்தைப் பெற்று அதைப் பூர்த்தி செய்து பாடசாலை ஆரம்பிப்பதற்குரிய ஆவணங்களையும் சமர்ப்பிக்கும்  பட்சத்தில் அக்கிராமத்தில்  ஆரம்பப் பாடசாலையை ஆரம்பிப்பதற்கு உதவுவோம்' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X