2025 மே 21, புதன்கிழமை

’சம்பந்தனின் ஓய்வின் முன்னர் உரிமை வேண்டும்’

Editorial   / 2017 ஒக்டோபர் 10 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ. ஹுஸைன்

நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இராஜவரோதயம் சம்பந்தனின் அரசியல் ஓய்வுக்கு முன்னர், தமிழினம், உரிமையை வென்றெடுக்க வேண்டிய அவசியத்தில் உள்ளது என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தெரிவித்தார்.

மட்டக்களப்பிலிருந்து பல்லைக்கழகத்துக்குத் தெரிவான மாணவர்களைக் கௌரவிக்கும் வைபவம், நேற்று முன்தினம் (08) இடம்பெற்றபோதே, அங்கு அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இந்த வைபவத்தில் தொடர்ந்து உரையாற்றிய அவர்,

“இந்த நாட்டிலுள்ள தமிழ் மக்கள், சம நிலையை வேண்டி நிற்கின்றார்கள். “தென்னிலங்கையிலுள்ள பேரினவாதிகளும் மகாநாயக்க தேரர்களும், இந்தச் சம நிலை சரிவராது எனக் கூறிக் கொண்டிருக்கின்றனர்.

“எனினும், சம நிலை வரும் வரை, இந்த நாட்டில் கல்வி முன்னேற்றமடையாது. சம நிலை பேணப்படாததால், தமிழ் மக்கள், கல்வியிலும் ஏனைய விடயங்களிலும் பல தரப்பட்ட பின்னடைவுகளையே சந்தித்து வருகின்றனர்.

“ஆனால், சம நிலை, இலங்கையைத் துண்டாடி விடுமென்று, தென் பகுதிப் பேரினவாதிகள் யோசிக்கின்றார்கள். வடக்கும் கிழக்கும் இணைந்ததான ஒரு சமஷ்டி முறையை, நாம் கோரி நிற்கின்றோம். இலங்கை நீதிமன்றம், சமஷ்டிக்குப் பயப்படத் தேவையில்லை என்று, நீதி பகர்ந்திருக்கின்றது.

“இப்படியான ஓர் இக்கட்டான நிலையில் தான், நமது தமிழ் பேசும் இனம் இருந்து கொண்டிருக்கின்றது. சிறுபான்மையினச் சமூகம், ஓர் இக்கட்டான நிலையில் இருக்கின்றது. இந்த நிலை எப்போது மாறும் என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

“ஆயுதப்போராட்டம் மௌனித்த நிலையிலே, அஹிம்சைப் போராட்டம் என்ற ரீதியிலே ஓர் இராஜதந்திரப் போராட்டமொன்றைச் செய்து கொண்டிருக்கின்றோம்.

“இந்த நாட்டில் நாங்கள் எதிர்ப்பார்க்கின்ற ஜனநாயகம், மீண்டும் எப்போது ஏற்படப் போகின்றது என்பதை, நாங்கள் எதிர்ப்பார்த்திருக்கின்றோம்.

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அதைச் செய்து கொண்டிருக்கின்றது. இரா.சம்பந்தன், அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னர் தமிழினம், தமது வேட்கையைத் தீர்ப்பதற்காக ஓர் உரிமையை வென்றெடுக்க வேண்டிய அவசியத்தில் இருந்து கொண்டிருக்கின்றது” என அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .