2025 மே 21, புதன்கிழமை

சூடு வைத்த தாய்க்குப் பிணை

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2017 செப்டெம்பர் 22 , மு.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

தங்க மோதிரத்தைத் தொலைத்தார் என்ற ஆத்திரத்தில், தனது 7 வயது மகளுக்கு அவயவங்களில் கரண்டியால் சூடு வைத்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரான  தாயை, பிணையில் செல்ல ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றம் அனுமதியளித்தது.

ஏறாவூர் பொலிஸாரால் கடந்த 17ஆம் திகதி கைது செய்யப்பட்டு, மூன்று தினங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அச்சிறுமியின் தாயான அமீர் றீமா (வயது 26), ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தில், புதன்கிழமை (20) மீண்டும் ஆஜர் செய்யப்பட்டார்.

இதன்போது மேலதிக நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமாகிய முஹம்மத் இஸ்மாயில் முஹம்மத் றிஷ்வி, சந்தேக நபரை தலா ஒரு இலட்ச ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல அனுமதித்ததோடு, வழக்கு விசாரணையை அடுத்த வருடம் (2018) பெப்ரவரி மாதம் 09ஆம் திகதிக்கு  ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள பள்ளியடி வீதியை அண்டியுள்ள வீட்டில் சிறுமிக்குச் சூடு வைத்த சம்பவம் கடந்த 15ஆம் திகதியன்று மாலை இடம்பெற்றிருந்தது.

மத்ரசாவுக்கு, அல்குர்ஆன் ஓதல் பயிற்சி வகுப்புக்காகச் சென்றிருந்த மேற்படி சிறுமி வீடு திரும்பும்போது, அவள் அணிந்திருந்த தங்க மோதிரம் இல்லாதிருப்பதைக் கண்ட தாய் ஆத்திரப்பட்டு சிறுமிக்கு நெஞ்சுப் பகுதி, பாதம், கைகள், வயிற்றுப் பகுதி ஆகிய அவயவங்களில் கரண்டியால் சூடு வைத்துள்ளார்.

சிறுமியின் அவலக் குரல் கேட்ட அயலவர்கள் இந்த விபரீதத்தை பொலிஸாருக்கு அறிவித்ததன் பேரில், உடனடியாக ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் தாயைக் கைது செய்திருந்தனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .