2025 மே 03, சனிக்கிழமை

’ஜனாதிபதியே தேர்தல் முடிவை எடுக்க வேண்டும்’: அரியநேத்திரன்

Editorial   / 2020 ஏப்ரல் 20 , மு.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பா.மோகனதாஸ்

பொதுத்தேர்தலா அல்லது மீண்டும் நாடாளுமன்றத்தை கூட்டுவதா என்ற தீர்மானத்தை எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மட்டுமே உண்டு. எந்த முடிவானாலும் இந்த வாரம் வெளியிட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக் கட்சி பட்டிருப்பு தொகுதித் தலைவருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

தற்போதைய தேர்தல் நிலைவரம் மற்றும் கொரோனா நோய்த் தொற்று பரவல் தொடர்பாக மேலும் கூறுகையில்,

பொதுத்தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்து ஒரு மாதமும், கொரோனோ வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைக்கான ஊரடங்கு சட்டம் தொடராக அமல்படுத்தி ஒரு மாதமும் நிறைவடையும் இவ்வேளையில், தேர்தல் நடத்துவதற்கான வாய்ப்புகள் இப்போதைக்கு சாத்தியம் இல்லாத நிலை உள்ளதாக பல்வேறு அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும், சுட்டிக்காட்டியபோதிலும் ஜனாதிபதியும் அவர் சார்ந்த அரசியல் கட்சி அமைச்சர்களும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் எப்படியும் தேர்தலை நடத்தி குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க முயல்கின்றதைக் காணமுடிகின்றது.

நாடாளுமன்றம் அதன் ஆயுட்காலம் முடிவதற்கு செப்டெம்பர் 3ஆம் திகதிவரை காலமுள்ள நிலையில், ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி சரியாக நாலரை மாதம் முடிந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 03ஆம் திகதி நாடாளுமன்றத்தை கலைத்து வேட்புமனு, தேர்தல், மீண்டும் நாடாளுமன்றம் கூடும் தினங்கள் என்பன ஜனாதிபதி கோட்டாபய, வர்த்தமானி மூலம் அறிவித்தார்.

வேட்பு மனு தாக்கல் செய்யும் இறுதி தினம் கடந்த மாதம் மார்ச் 19ஆம் திகதியாக இருக்கும் நிலையில் இலங்கையில் கடந்த மார்ச் 16ஆம் திகதியே கொரோனா வைரஸ் பரவல் ஆரம்பமானது. ஆனால் அதை பொருட்படுத்தாமல் வேட்பு மனுவை எப்படியும் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கையை அரசும் தேர்தல் ஆணைக்குழுவும் முன்னெடுத்தனர். மார்ச் 19ஆம் திகதி வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்பே மறுநாள் மார்ச் 20, தொடக்கம் நாடு தழுவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

இதன்காரணமாக சுகாதார சேவைகள், வைத்தியர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் என பல தரப்பட்டவர்களும் அர்ப்பணிப்புடன் தமது கடமைகளை மேற்கொண்டமையால் இலங்கை முழுவதும் பரவும் நிலையில் இருந்த கொரோனா நோய் தடுக்கப்பட்டது.

இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. இலங்கையில் இதுவரை 271 பேர் நோய் பாதிக்கப்பட்டு 96 பேர் குணமடைந்ததுடன் 7 பேர் இறந்துள்ளனர். 158 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் நாடு முழுவதும் பல நூற்றுக்கணக்கானவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்க வைத்துள்ளனர். வீடுகளிலும் பலர் தனிமைப்படுத்தலில் முடக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் உலகம் பூராகவும் இருநூறுக்கு மேற்பட்ட நாடுகளிலும் இன்னும் கொரோனா நோய் அச்சம் நீங்கவில்லை இலங்கையிலும் முற்றாக நீங்கவில்லை.

அவசரப்பட்டு தேர்தல் நடத்தாமல் மீண்டும் கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை கூட்டுமாறு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் விடுத்த வேண்டுகோள்களை பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ கணக்கெடுக்கவில்லை. தாம் எப்படியும் இந்த கொரோனா சிலுசிலுப்புடன் அறுதி பெரும்பான்மை பெறக்கூடிய சந்தர்ப்பம் உள்ளது. மீண்டும் நாடாளுமன்றத்தை கூட்டுவதன் மூலம் தற்போதய செல்வாக்கு சிலவேளை சரியக்கூடும் என்ற மனப்பாங்குடனேயே சகோதர ஆட்சியாளர்கள் பின்னடிப்பது நன்கு புலனாகிறது.

எது எப்படியானாலும் கலைக்கப்பட்ட நாடாளுமன்றம் மூன்று மாதம் மட்டுமே காபந்து அரசு இயங்க முடியும் என்பதே அரசியல் யாப்பில் உள்ளது. அப்படியானால் எதிர்வரும் ஜூன் 3 ஆம் திகதியுடன் காபந்து அரசின் செயல்பாடு செயல் இழக்கக்கூடும். இதற்காகவே தேர்தல் ஆணைக்குழு தம்மால் தனித்து முடிவு எடுக்க முடியாமல் ஜனாதிபதியிடம் சட்டமா அதிபரின் ஆலோசனையை பெறுமாறு எழுத்து மூலமான கோரிக்கையை முன்வைத்தார். ஆனால் ஜனாதிபதி தமது பதிலை அவரின் உத்தியோகபூர்வ செயலாளர் ஊடாக தாம் சட்டமா அதிபரின் ஆலோசனை பெற தேவையில்லை வேண்டுமானால் தேர்தல் ஆணைக்குழு பெறவேண்டும் என்ற மாதிரியான ஒரு பதிலை வழங்கியுள்ளார். 
இவ்வாறான இடியப்ப சிக்கல் நிலையில் இன்றைய இலங்கை அரசியலும் பொதுத்தேர்தல் விடயமும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் முடிவு எடுக்கமுடியாமல் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்ற ஆயுட்காலம் முடிவதற்கு முன் கலைக்கப்பட்டமையால் நாடாளுமன்றத்தை கலைத்த ஜனாதிபதி மீண்டும் நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கான அதிகாரம் உள்ளபோதும் அவர் அவ்வாறு செய்யாமல் எப்படியும் தேர்தல் நடத்த வேண்டும் என்பதில் விடாப்பிடியாக உள்ளார். இந்த நிலைமையில் சட்டங்களை பயன்படுத்துவதா மனிதாபிமானத்தை பயன்படுத்துவதா என்ற நிலை தற்போது உருவாகியுள்ளது.

ஏனெனில் ஐந்து வருடம் கடந்து வழமை போன்று நாடாளுமன்றம் எதிர்வரும் செப்டெம்பர் 3 ஆம் திகதி கலைக்கப்பட்ட பின்பு இந்த கொரோனா வைரஸ் நோய் தாக்கம் இலங்கையில் வந்திருக்குமானால் சிலவேளை தேர்தல் நடத்த முடியாத இந்த நிலை ஏற்பட்டிருப்பின் நாடாளுமன்றத்தை கூட்டுமாறு எவரும் கேட்க முடியாது. ஏனெனில் அதன் ஆயுட்காலம் நிறைவடைந்தால் தேர்தல் ஆணைக்குழு மட்டுமே முடிவு எடுப்பதற்கான முழு அதிகாரம் உண்டு. ஆனால் தற்போதைய நிலை அவ்வாறு இல்லை நாடாளுமன்றம் ஆயுட்காலம் முடிவதற்கு முன் ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரத்தால் நாடாளுமன்றத்தை கலைத்தமையால் அவரே மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரின் நடவடிக்கை தேர்தல் ஆணைக்குழுவின் ஆலோசனையுடனே அமைய வேண்டும். இதுவே சாத்தியம் உள்ளது. ஏறக்குறைய ஒரு மாதம் என்ன தீர்மானம் வரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X