Gavitha / 2016 செப்டெம்பர் 27 , மு.ப. 03:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடிவேல் சக்திவேல்
“தமிழரசுக் கட்சிக்காக உழைத்தவர்கள், பாடுபட்டவர்கள் தேர்தல்களில் போட்டியிட முடியாத நிலைமையே, எமது தமிழரசுக் கட்சியில் தோன்றியுள்ளது. இதனை ஆதரவாளர்கள் தட்டிக்கேட்க வேண்டும்” என, மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதிக் கிளைக் கூட்டம், கிளையின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பா.அரியநேத்திரன் தலைமையில் நடைபெற்றது.
இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மா.நடராசா மற்றும் கிளைச் செயலாளர் துஷ்யந்தன் மற்றும் கட்சியின் நீண்டகால உறுப்பினர்கள், தற்கால உறுப்பினர்கள் என பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
இக்கூட்டமானது, மட்டக்களப்பில் தந்தை செல்வாவுக்கு சிலை அமைப்பது தொடர்பாக அராய்வதற்காகவே கூட்டப்பட்டதாக, கிளையின் தலைவர் தனது தலைமையுரையில் தெரிவித்தார்.
“தந்தை செல்வாவுக்கு சிலையெடுப்பது வரவேற்கத்தக்கது. இது தொடர்பில் அமைக்கப்பட்ட குழுவில், தந்தை செல்வா வாழ்ந்த காலத்தில் தமிழரசுக் கட்சி தோல்வியடைய வேண்டும் என்று, தந்தை செல்வாவுக்கு எதிராக செயற்பட்டவர்கள் உள்வாங்கப்படக் கூடாது. இது தந்தை செல்வாவுக்குச் செய்யும் துரோகம்” என, கட்சியின் மூத்த உறுப்பினரும் சட்டத்தரணியுமான சிறிஸ்கந்தராசா எடுத்துரைத்தார். இதனை சபையில் இருந்த சிலர் ஏற்றுக் கொண்டு, தங்களது கருத்தினையும் முன்வைத்தனர். இதற்குப் பதிலளிக்கும் முகமாக எழுந்த தலைவர், “அமைக்கப்பட்ட குழுவில் உள்ளவர்களின் பெயர்களை வாசித்து, இதில் யார் அவ்வாறு செயற்பட்டவர்கள் என்று கூறுங்கள்?” எனக் கேட்டுக்கொண்டார். இதற்கு எவரும் பதிலளிக்க முன்வரவில்லை.
குறித்த சர்ச்சைக்குப் பதிலளித்து உரையாற்றும் போதே, நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்
“சட்டத்தரணி சிறிஸ்கந்தராசா அவர்களின் ஆதங்கத்துக்கு நான் மதிப்பளிக்கின்றேன். ஆனால், நான் அவருக்குப் பதிலளிக்க வேண்டிய கட்டாயத்திலும் இருக்கின்றேன். தந்தை செல்வாவை, செவிடன் என்று கூறிய ஜீ. ஜீ.பொன்னம்பலத்தையும் ஒன்றிணைத்து, தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாக்கிய, பாகுபாடு பார்க்காத மனிதர் தந்தை செல்வா. எனவே தமிழசுக் கட்சியில் இடையில் இணைந்தவர்களையும், இந்த சிலையெடுப்பதில் இணைத்துக் கொள்வதில் தவறில்லை என்று நான் நினைக்கின்றேன்.ஏனென்றால், கடந்த காலங்களில் நடந்த சம்பவங்களால் இவ்வாறான சம்பவங்கள் நடைபெற்றிருக்கலாம்
அண்மையில்கூட, எமது கட்சியில் இல்லாத, வேறு கட்சிக்கு ஆதரவாக இருந்தவர்கள், தமிழரசுக் கட்சியில் உள்வாங்கப்பட்டு, தேர்தலில் போட்டியிட்டார்கள். ஒரு காலமும் எங்களுடன் இணைந்து, இவர்கள் செயற்பட்டவர்கள் அல்லர். நாங்கள், 2012 ஆம் ஆண்டு தமிழரசுக் கட்சி மாநாட்டை, மட்டக்களப்பில் நடாத்தினோம். இதிலும் ஆதரவாளர்களின் பங்களிப்பு, சற்றுக் குறைவாகவே இருந்தது. ஏன், தற்போது இருக்கின்ற பொதுச் செயலாளர் கூட, அந்த மாநாட்டுக்கு ஆதரவு தருவதற்கு வரவே இல்லை. காரணம், அனைவரும் பிள்ளையானுக்கும் கருணாவுக்கும் பயந்து கொண்டு, ஒதுங்கிக் கொண்டு அமைதியாக உள்ளே இருந்தார்கள். 2012ஆம் ஆண்டு வீட்டுக்கு வந்து, எங்களைச் சந்திக்க வேண்டாம் என்று கூறியவர் கூட, தற்போது கட்சியின் முக்கிஸ்தராக இருக்கின்றார்.
2015ஆம் ஆண்டு முன்னாள் போராளிகளாக இருந்த பாதர் என்று சொல்லப்படுபவர், வந்தாறுமூலையில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அலுவலகம் அமைத்து, அவரின் வெற்றிக்கு உழைத்தவர். வாக்கெண்ணும் நிலையத்திலும், கடமையில் ஈடுபட்டிருந்தார். இத்தேர்தலில் மைத்திரி வென்ற பின்னர், தனது சித்தபபாவின் மகனான தமிழரசுக் கட்சியின் செயலாளர் துரைராஜசிங்கம் ஊடாக, கட்சிக்குள் நுழைந்து, தற்போது அதே பொதுச் செயலாளர், அவருக்கு மக்கள் தொடர்பாடல் என்கின்ற பதவி வழங்கி சம்பளமும் வழங்கப்பட்டு வருக்கின்றது.
இவ்வாறு இருக்கின்ற நிலையில், தற்போது தமிழரசுக்கட்சியில் ஒருசிலரை இணைத்துக் கொள்வதில் தவறில்லை. தமிழரசுக் கட்சிக்காக கஷ்டப்பட்டவர்கள், தேர்தலில் போட்யிடுவதற்கு இணைத்துக் கொள்வதில் சிரமம் இருக்கின்றது இதனை ஆதரவாளர்கள் தட்டிக் கேட்க வேண்டும்” என இதன் போது தெரிவித்தார்.
18 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
3 hours ago