2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

’தமிழ் மக்களின் பகுதிகளில் ஆமை வேகத்திலேயே அபிவிருத்திகள் முன்னெடுப்பு’

Suganthini Ratnam   / 2017 ஜூன் 29 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

யுத்தம் முடிந்த பின்னர், தமிழ் மக்கள் வாழும்  பகுதிகளில் அபிவிருத்தித் திட்டங்கள் ஆமை வேகத்திலேயே முன்னெடுக்கப்படுகின்றன என,   கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.

மட்டக்களப்புப் பிராந்திய கால்நடை பயிற்சி நிலையம், கல்லடியில் புதன்கிழமை (28)   திறந்து வைக்கப்பட்டது. இத்திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது, '2009ஆம் ஆண்டு இந்த நாட்டில் யுத்தம் முடிந்த  பின்னர், அபிவிருத்தித் திட்டங்கள் முறையாக முன்னெடுக்கப்படவில்லை.  வடக்கு, கிழக்கு மாகாணங்களில்; அபிவிருத்தித் திட்டங்கள்  ஆமை வேகத்திலேயே முன்னெடுக்கப்படுகின்றன.  

'வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மக்களுக்கு நம்பிக்கையைக் கொடுக்கக்கூடிய வகையிலும் பக்கபலமாகவும் இருந்து ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் உலக உணவு விவசாய ஸ்தாபனம் போன்ற அமைப்புகள் உதவி வழங்குவதே எமது மக்கள் தமது பகுதிகளை ஓரளவேனும் அபிவிருத்தி செய்வதற்கு முடிந்துள்ளது' என்றார்.

'மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் கால்நடை வளர்ப்பாளர்கள் கஷ்டங்களை எதிர்நோக்கி வந்தனர்.  கால்நடைகள் கடத்தப்பட்டன,  சுடப்பட்டன.'2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதிக்கு பின்னர், கிழக்கு மாகாணசபையின் ஆட்சியில் பங்குதாரர்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாறிய பின்னர் இந்த நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது' என்றார்.

'இந்த நாட்டில் தமிழ் மக்கள் வாழும் பகுதிகள் தொடர்ச்சியாகப் புறக்கணிக்கப்பட்டே வந்துள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் அனைத்து வளங்களும் உள்ள மாவட்டமாகக் காணப்படுகின்றது.  ஆனால், அந்த வளங்களைச் சரியான முறையில் பயன்படுத்த முடியாத நிலைமை  இன்னும் காணப்படுகின்றது.

'இம்மாவட்டத்தில் பல குளங்களும் நீர் நிலைகளும் விவசாய நிலங்களும் காணப்படுகின்ற போதிலும், அவற்றை முறையாகப் பயன்படுத்த முடியாத நிலைமை காணப்படுகின்றது. கடந்த காலத்தில் அவற்றை முறையாகப் புனரமைத்திருந்தால், இங்குள்ள  விவசாயிகளும் கால்நடை வளர்ப்பாளர்களும் பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிட்டிருக்காது' என்றார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X