2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘தேவையென்றால் எவரையும் மடியில் வைப்பர்’

Princiya Dixci   / 2021 ஒக்டோபர் 10 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

“இந்த அரசாங்கமானது தேவையென்றால் எவரையும் தனது மடியில் வைத்துக்கொள்ளவும் தமது தேவைக்காக அப்பாவி இளைஞர்களை சிறையில் வைக்கவும் செய்வார்கள்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

“3,000 பனை விதைகள் நடும் வாலிபர்கள் எனும் தலைப்பில், பனை விதைகள் நடும் வேலைத்திட்டம், இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வாலிப முன்னணியின் ஏற்பாட்டில், போரதீவுப்பற்றில் இன்று (10) ஆரம்பித்துவைக்கப்பட்டன.

இதன்போது உரையாற்றிய சாணக்கியன் எம்.பி,

“எங்களுடைய அரசியல் ரீதியான விடயங்களில் தமிழரசுக் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எவ்வாறு அக்கறையாக இருக்கின்றதோ அதேபோல எங்களுடைய இயற்கை வளங்களைப் பாதுகாப்பதிலும் நாங்கள் அக்கறையாக இருக்கின்றோம்.

“இந்த அரசாங்கமானது தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளை தொடர்ச்சியாக செய்துகொண்டிருக்கின்ற ஓர் அரசாங்கமாக இருக்கின்றது.

“தெற்கில் விடுதலைப் புலிகளை மீளக்கட்டியெழுப்பும் வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பதாகக் கூறி, சிங்களை மக்களை அச்சங்கொள்ளச் செய்வதற்காக தமிழ் இளைஞர்களை கைதுசெய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

“தமிழ் அரசியல் கைதிகளை விடுதலைப் புலிகளுடன் தொடர்புள்ளவர்களாகக் கூறி, எந்தவித விசாரணைகளும் இன்றி நீண்டகாலமாக தடுத்துவைத்துள்ளனர்.

“அண்மையில் நடைபெற்ற ஒரு திறப்பு வழாவிலே கே.பியை இந்த நாட்டினுடைய சிறுவர் கல்விக்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் பியால் நிசாந்த கட்டியணைத்து மிகவும் பாசமாக உரையாடினார்.

“விடுதலைப் புலிகளுடைய சொத்துகள் தன்னிடம் இல்லை என்று கே.பி சொல்கின்றார். கே.பி, போர்க்குற்றம் புரிந்தார் என பல குற்றச்சாட்டுகள் அவர் மீது இருக்கின்றது.

“தமிழ் இளைஞரொருவர் பேஸ்புக்கில் விடுதலைப் புலிகளுடன் தொடர்புபட்ட ஒரு செய்தியை பதிவிட்டமை ஒரு வருடம் சிறையில் வைத்திருக்கக்கூடிய ஒரு குற்றம். ஆனால், கே.பியை நீங்கள் கட்டியணைத்து உறவாடலாம். சிங்கள மக்கள் இதனைப் புரிந்துகொள்ள வேண்டும்.

“இதுவே இந்த அரசாங்கத்தினுடைய உண்மையான நிலைப்பாடாகும். இளைஞர்களுக்கு ஒரு நீதி, அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகின்ற எவராக இருந்தாலும் அவர்களுக்கு இன்னொரு நீதி என்பதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .