2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

’நல்லாட்சியில் தீர்வு கிடைக்குமென்ற நம்பிக்கை உண்டு’

Suganthini Ratnam   / 2017 ஜூலை 02 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ், ஏ.எச்.ஏ.ஹுஸைன்

சிறுபான்மையினமான தமிழ், முஸ்லிம் சமூகங்களை மாத்திரமின்றி, அச்சமூகங்களின் அரசியல் தலைவர்களையும் கடந்தகால அரசாங்கங்கள் பிரித்து, மோதவிட்ட வரலாற்றுத் தடயங்களை எவராலும் மறக்க முடியாது என,  கிழக்கு மாகாண   முதலமைச்சர்  செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

சிறுபான்மைச் சமூகங்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்கப்படக்கூடாது என்பதற்காக கடந்த காலத்தில்  இவ்விரு சமூகங்களையும் மோதவிட்டு, மத்திய அரசாங்கத்திலிருந்தவர்கள் பிரித்தாண்ட சம்பவங்கள் தமக்குத் தெரியும் எனத் தெரிவித்த அவர், இவ்வாறான தவறுகளை இனிமேல்  விடப்போவதில்லை எனவும் கூறினார்.

ஆறுமுகத்தான்குடியிருப்பு, மயிலம்பாவெளி,  தாமரைக்கேணி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த குடும்பங்கள் இலவசமாக குடிநீர் இணைப்பைப் பெற்றுக்கொள்வதற்கான பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு, ஆறுமுகத்தான்குடியிருப்புக் கலைமகள் வித்தியாலயத்தில் சனிக்கிழமை (1)  நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது, 'ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான தற்போதைய நல்லாட்சியில், சிறுபான்மைச் சமூகங்களுக்கு உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பதற்கிணங்க, இனப் பிரச்சினைக்கான தீர்வு கிடைக்குமென்ற  நம்பிக்கை எமக்கு உள்ளது.

'எமது நாட்டில் இதுகாலவரை இருந்துவந்த இனப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்குமென்று நாம் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

'குறுகிய காலத்தில் தீர்வு கிடைக்குமென்ற நிலையில், நாட்டில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படவுள்ளது. இவ்வேளையில் தமிழ், முஸ்லிம் சமூகங்களும் ஒன்றிணைந்து தங்களது அதிகாரப்பகிர்வைப் பெறுவதற்காக அரசியல் தலைமைகள் குரல் கொடுக்கும் நிலையில், இவ்விரு சமூகங்களும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்' என்றார்.

'சிறுபான்மைச் சமூகங்களுக்கு அதிகூடிய அதிகாரப்பகிர்வைப் பெற்றுக்கொள்ளகூடிய வகையில் தமிழ், முஸ்லிம் சமூகங்கள் இணைந்து போராட வேண்டிய நிலைமை உள்ளது.

'இந்த நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமாயின், பெற்றுக்கொண்ட சமாதானத்தை நிரந்தர சமாதானமாக மாற்ற வேண்டுமாயின், சிறுபான்மைச் சமூகத்தினுடைய அரசியல் உரிமைகளைப் பகிர்ந்தளிக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசாங்கத்துக்கு உண்டு' என்றார்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X