2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

நெல் உலர வைக்கும் களம் இன்றி விவசாயிகள் சிரமம்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 ஜூலை 16 , பி.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, படுவான்கரைப் பிரதேசத்திலுள்ள புதுமண்டபத்தடி, குறிஞ்சாமுனை, பருத்திச்சேனை, இலுப்படிச்சேனை, கொத்தியாபுலை, காஞ்சிரங்குடா, தேவிலாமுனை, கொல்லனுலை, குருந்தையடிமுன்மாரி, பன்சேனை போன்ற நெற்செய்கைப் பிரதேசங்களிலுள்ள விவசாயிகள், தமது அறுவடை செய்யப்பட்ட நெல்லை உலர்த்துவதற்குக் களம் இன்றி சிரமப்படுவதாகத் தெரிவிக்கின்றனர்.

இதுவிடயமாக பிரதேசத்திலுள்ள விவசாயிகளும் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளும் தமது கருத்துகளை, ஊடகங்களுக்கு இன்று (16) தெரியப்படுத்தினர்.

தமது உணவுத் தேவைக்காகவோ, விற்பனைக்காகவோ, அல்லது விதை நெல்லுக்காகவோ, தாம் விளைவித்த நெல்லை உலர்த்திப் பத்திரப்படுத்தி வைப்பதற்கு வசதி வாய்ப்புகள் இல்லாததால், தாங்கள் பெரு நஷ்டம் அடைவதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர். எனினும், கிராமங்களை ஊடறுத்துச் செல்லும் தார் வீதிகளில் நெல்லைப் பரப்பி, அவ்வப்போது வசதிக்கேற்ற வகையில் உலர வைத்தெடுப்பதாகக் கூறும் கிராமத்து விவசாயிகள், இதனால் கால்நடைகள் உண்பதாகவும், வாகனங்களின் சில்லுகளில் நெல் பட்டு, சேதமடைந்து விடுவதாகவும் கூறுகின்றனர்.

மேலும் வீதியைப் பயன்படுத்துவோர், தங்களுக்கு இடைஞ்சல் ஏற்படுவதாகத் தெரிவிப்பதாகவும், விவசாயிகள் குறிப்பிட்டனர்.

இத்தகைய சிரமங்களையும் இழப்புகளையும் தவிர்த்துக் கொள்வதற்காக, பிரதேச விவசாயிகளுக்கென, பொதுவானதொரு நெல் உலர வைக்கும் களத்தை, சம்பந்தப்பட்ட விவசாய, கமநல மற்றும் நெற் சந்தைப்படுத்தும் திணைக்களங்கள் அமைத்தால், அது விவசாயிகளுக்கான பெரும் நன்மை பயக்கும் எனவும், பிரதேச விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X