2025 மே 06, செவ்வாய்க்கிழமை

பிள்ளையான் கைதானமை சதிவேலையாகும்: பிரசாந்தன்

Gavitha   / 2015 ஒக்டோபர் 13 , மு.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை கைது செய்ததானது  அரசியல் பழிவாங்கும் செயலாகும் என  தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் மட்டக்களப்பு அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

குற்றத்தடுப்பு புலனாய்வுப்பிரிவு அலுவலகத்துக்கு விசாரணைக்காக நேரடியாக சென்றிருந்த சந்திரகாந்தனை தடுத்து வைத்தனர். இந்நிலையில்,கைது செய்யப்பட்டார், சரணடைந்தார் என்றெல்லாம் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இது முற்றிலும் தவறான செய்தியாகும்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு சேறுபூச வேண்டும். மக்கள் மத்தியில் இக்கட்சியின் செல்வாக்கை இல்லாமல் செய்ய வேண்டும் என்ற அரசியல் ரீதியான செயற்பாடாக இது இருந்தால் அது எமது கட்சியினை அரசியல் ரீதியாக பழிவாங்க எடுக்கும் நடவடிக்கையாகும்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜோசப் பரராஜசிங்கம், ரவிராஜ் ஆகியோரின் கொலைகள் மாத்திரமல்ல பலர் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களின் கொலைகள் தொடர்பான விசாரணைகள் இன்னும் கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில் ஒரு சாராரை திருப்திப்படுத்த குறிப்பாக வடக்கு, கிழக்கில் இருக்கின்ற தமிழ் கட்சிகளை திருப்திப்படுத்த வேண்டும் என்கின்ற ஒரு நடவடிக்கையாக இவ்வாறான கைதுகள் இடம்பெறுகின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது.

சந்திரகாந்தனை இன்று செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. அவர் தடுத்து வைக்கப்பட்ட பின்னர் அவருடன் கதைக்க கிடைக்க வில்லை.

எதற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார் எதற்காக விசாரணை செய்யப்படுகின்றார் என்ற விடயங்கள் எமக்கு அறிவிக்கப்படவில்லை.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மற்றும் மாகாண சபை தேர்தல் போன்றவற்றில் எமது கட்சியை பல வீனப்படுத்த எடுக்கும் சதிவேலையாக இது இருக்கலாமெனவும் எமக்கு சந்தேகிக்க வேண்டியுள்ளது என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X