2025 மே 01, வியாழக்கிழமை

பாடசாலைக்குள் அத்துமீறல்; ஐவர் கைது

Editorial   / 2020 செப்டெம்பர் 16 , பி.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்துக்குட்பட்ட பிறைந்துறைச்சேனை, சாதுலியா வித்தியாலயத்தின் ஆசிரியர், பிரதி அதிபரைத் தாக்க முற்பட்டமைக்கும் பாடசாலை சொத்துகளைச் சேதப்படுத்தியமைக்கும் எதிர்ப்புத் தெரிவித்து, பாடசாலை நுழைவாயிலை மூடி, பெற்றோர்களால் இன்று (16) காலை போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இவ்வித்தியாலயத்தில் தரம் 2இல் கல்வி பயிலும் இரு மாணவர்கள் நேற்று மோதிக்கொண்டதில், ஒரு மாணவனின் தலையில் காயம் ஏற்பட்டதையடுத்து, வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து காயமடைந்த மாணவனின் பெற்றோர், உறவினர்கள் பாடசாலைக்குள் நுழைந்து, மாணவனின் வகுப்பாசிரியர், பிரதி அதிபர் ஆகியோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவர்களைத் தாக்க முற்பட்டுள்ளனர்.

இது தொடர்பில், பாடசாலை நிர்வாகத்தினரால் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்யப்பட்டது.

இதன் பின்னர், நேற்று இரவு மேற்படி நபர்கள், பாடசாலையின் விளம்பரப் பலகை, கடிகாரம், பூச்சட்டிகள், அதிபர் பெயர் பலகை, கதவு உள்ளிட்டவற்றைச் சேதப்படுத்தியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால்,  இன்று காலை பாடசாலைக்கு வருகை தந்த பெற்றோர், பாடசாலை சொத்துகளைச் சேதப்படுத்தி, ஆசிரியர்களை அவமதித்த நபர்களைக் கைதுசெய்ய கோரி, பாடசாலை நுழைவாயிலைப் பூட்டி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

வாழைச்சேனை பொலிஸார், ஓட்டமாவடி கோட்டக் கல்வி அதிகாரி எம்.ஐ.அஹ்சாப் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வருகை தந்து, நிலைமைகளை விசாரித்தனர்.

அத்துடன், சந்தேகத்தின் பேரில் ஐந்து பேரை, பொலிஸார் கைதுசெய்தமையை அடுத்து எதிர்ப்புக் கைவிடப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .