Editorial / 2022 பெப்ரவரி 08 , பி.ப. 05:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
வ.திவாகரன்
அரசாங்கத்தால் வழங்கப்பட்ட மானிய இயற்கை உரத்தில் வேளாண்மை செய்து பாதிப்படைந்துள்ள விவசாயிகளுக்கு அரசாங்கம் முழுமையான நட்டஈட்டை வழங்குமா என கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் இரா.துரைரெட்ணம் கேள்வியெழுப்பினார்.
அரசாங்கத்தின் கொள்கையான இயற்கை உரத்தைப் பயன்படுத்த வேண்டுமென முன் வைக்கப்பட்ட திட்டத்தை, மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் விருப்பமின்றியே நடைமுறைப்படுத்தினார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
தற்போது, அத்திட்டம் விவசாயிகளுக்கு நன்மை அளிக்கவில்லை. ஏமாற்றத்தையே அளித்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஊடகங்களுக்கு இது குறித்து மேலும் கருத்துரைத்த அவர், “இதனால் குத்தகைக்கு காணி எடுத்த விவசாயிகளும், அடிப்படையில் வறுமையான விவசாயிகளும், நடுத்தர விவசாயிகளும் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.
“ஒரு வேளை உணவுக்குக் கூட மற்றவர்களிடம் கையேந்தும் நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளதோடு, வட்டிக்குப் பெற்றுக் கொண்ட பணத்தை மீளச் செலுத்த முடியாமலும், நகைகள், கால்நடைகள் என இருந்த மூலதனத்தைக் கூட இழந்தும் அடுத்த போகம் எவ்வாறு வேளாண்மை செய்வதென அறியாது நடுத் தெருவில் நிற்கின்றனர்.
“நீர்பாசன வளங்கள் முழுமையாக இருந்தும் கூட இயற்கை உரத்தைப் பயன்படுத்தி வேளாண்மை செய்த விவசாயிகள் நட்டப்பட்டதென்பது ஏற்றுக்கொள்ள முடியாது.
“பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழுமையான நட்டஈட்டை வழங்கினால் மாத்திரமே எதிர்காலத்தில் வேளாண்மை செய்கை பண்ண முடியும். எனவே, கருணை கூர்ந்து, பாதிப்புக்கான முழு நட்டஈட்டையும் வழங்க அரசு ஆவண செய்ய வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .