2025 மே 10, சனிக்கிழமை

மட்டக்களப்பில் பிள்ளையான் அலுவலகம் முற்றுகை

Princiya Dixci   / 2022 ஏப்ரல் 05 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, க.விஜயரெத்தினம், எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பில் உள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமை காரியாலயம், ஆர்ப்பாட்டக்காரர்களால் நேற்று (04) மாலை முற்றுகையிடப்பட்டதால் அப்பகுதியில் பதற்ற நிலையேற்பட்டது.

பொருள்களின் விலையோற்றம் மற்றும் பொருளாதார நெருக்கடிகளை கண்டித்தும் அரசாங்கத்தைப் பதவி விலகக் கோரியும், நாடளாவிய ரீதியில் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

அந்தவகையில், மட்டக்களப்பு - கல்லடி பாலத்திலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று மாலை முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் டெலோவின் உப தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளருமான பிரசன்னா இந்திரகுமார், மட்டக்களப்பு மாநகர சபையின் மேயர் தி.சரவணபவன், பிரதி மேயர் க.சத்தியசீலன், மாநகர சபை உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

கல்லடி பாலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து அங்கிருந்து ஊர்வலமாக திருமலை வீதியுடாக மட்டக்களப்பு நகர் வரையில் பேரணி நடைபெற்றது.

பேரணி காரணமாக போக்குவரத்து நீண்டநேரம் பாதிக்கப்பட்டிருந்ததுடன், நகருக்குள் வந்த பேரணியானது வாவிக்கரை வீதியூடாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமைக் காரியாலயம் வரையில் சென்று காரியாலயத்துக்கு முன்பாக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), இன்றைய நிலையை உணர்ந்து, மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் பதவியை இராஜினாமா செய்து, அரசாங்கத்துக்கு வழங்கும் ஆதரவை விலக்கிக் கொள்ளவேண்டும் என அவர்கள் கோஷமிட்டனர்.

இதனைத் தொடர்ந்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமை காரியாலயத்துக்கு முன்பாக பொலிஸார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X