2025 மே 01, வியாழக்கிழமை

‘மயான பூமி’ பிரகடனம்; தவிசாளருக்கு அழைப்பாணை

Editorial   / 2020 செப்டெம்பர் 23 , பி.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு - செல்வா நகர் கிழக்கு எனும் மண்முனை பிரதேச சபைக்கு சொந்தமான பகுதியில், 40 ஏக்கர் பரப்புக் கொண்ட குடியிருப்பு நிலம் மற்றும் தனியாருக்கு சொந்தமான காணியை, “மயானபூமி” என பிரகடனம் செய்த மண்முனை பிரதேச சபைத் தவிசாளர் சோமசுந்தரம் மகேந்திரலிங்கத்துக்கு, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக, சிரேஷ்ட சட்டத்தரணியும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான ஆரிப் சம்சுதீன் தெரிவிக்கையில், “26.06.2020 அன்று, இல.2,182ஆம் இலக்க வர்த்தமானப் பத்திரிகை அறிவித்தலின் பிரகாரம் மேற்படி  மயான பூமி என பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்படைந்த பொதுமக்கள், மண்முனை பிரதேச சபை தவிசாளருக்கெதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்” என்றார்.

அந்த வழக்கு, மட்டக்களப்பு நீதவான் ஏ.சி. றிஸ்வான் முன்னிலையில் நேற்று (22) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

பாதிக்கப்பட்டவர்கள் சார்பில், கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பிரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஆரிப் சம்சுதீன், சட்டத்தரணி எம்.ஐ.எம். இன்ஸாப் ஆகியோர் வாதாடினர்.

மயான பூமி எனப் பிரகடனப்படுத்தப்பட்ட பகுதியில், 120 இற்கும் மேற்பட்ட பொதுமக்களின் குடியிருப்புக் காணி அமைந்திருந்ததுடன், தவிசாளர் மகேந்திரலிங்கம் இதனை சிறிதளவேனும் கவனத்திற்கொள்ளவில்லை என்றும் காணிகளை மயானபூமி எனப் பிரகடனம் செய்யும் அதிகாரம் தவிசாளருக்கு இல்லை என்றும் சட்டத்தரணிகள், நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்தனர்.

பகிரங்க ஊழியராக இருக்கும் பிரதேச சபை தவிசாளரின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகளில் இருந்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது நீதிமன்றதின் கடமையாக இருப்பதாகவும் சட்டத்தரணிகள் கூறினர்.

வழக்கை நன்கு பரிசீலனை செய்தபின் குற்றஞ்சாட்டப்பட்டபட்ட மண்முனை பிரதேச சபையின் தவிசாளரான சோமசுந்தரம் மகேந்திரலிங்கம் என்பவருக்கு நீதிமன்றம்  அழைப்பாணை பிறப்பித்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .