2025 மே 14, புதன்கிழமை

‘மார்க்கத்துக்கு விரோதமான வர்த்தக நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்குவதில்லை’

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 டிசெம்பர் 03 , பி.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

மார்க்கத்துக்கு விரோதமான வர்த்தக நடவடிக்கைகளுக்கான அனுமதிகளை, அடுத்தாண்டு (2019) தொடக்கம் வழங்குவதில்லையென, ஏறாவூர் நகர சபையால் பொதுத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, அந்நகரசபையின் செயலாளர் எம்.ஆர்.சியாஹுல் ஹக் அறிவித்துள்ளார்.

ஏறாவூர் நகர சபையின் 8ஆவது அமர்வில் எட்டப்பட்ட இந்தத் தீர்மானத்தின்படி, ஏறாவூர் நகரசபை எல்லைக்குள் முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பகுதியில், சீடி (இருவட்டு), வீடியோ, அதிர்ஸ்டலாபச் சீட்டு விற்பனை நிலையங்களை நடத்துவதற்கு, 2019ஆம் ஆண்டு அனுமதிப்பத்திரம் வழங்குவதில்லையெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்த பொதுத் தீர்மானத்தின்படி, ஏறாவூர் நகரசபை எல்லைக்குள் முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பகுதியில், தற்போது இயங்கி வரும் சீடி, வீடியோ, அதிர்ஸ்டலாபச் சீட்டு விற்பனை நிலையங்களை, அவற்றின் உரிமையாளர்கள் அல்லது நடத்துபவர்கள், எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் மூடிவிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேவை ஏற்படின், நகரசபை ஆளுகையின் கீழுள்ள, முஸ்லிம் மக்கள் செறிந்து வாழாத இடங்களில் சீடி, வீடியோ, அதிர்ஸ்டலாபச் சீட்டு விற்பனை நிலையம் போன்றவற்றை நடத்துவதற்கான அனுமதி தொடர்பில் விண்ணப்பிக்கலாம்.

ஏறாவூர் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், ஜம்மிய்யத்துல் உலமா, பாடசாலைகள் உட்பட பிரதேசத்தில் உள்ள பல சமூக நிறுவனங்களின் வேண்டுகோளுக்கேற்பவே, நகர சபை இந்தப் பொதுத் தீர்மானத்தை எட்டியுள்ளது.

எனவே, அறிவுறுத்தலுக்கமைய சபைத் தீர்மானத்தைக் கருத்திற்கொள்ளாது தாங்கள் தொடர்ச்சியாக வியாபாரத்தில் ஈடுபட்டால் சபை எடுக்கும் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியேற்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .