2025 மே 14, புதன்கிழமை

‘மௌனித்திருக்கும் த.தே.கூவின் கபடத்தனம் அம்பலம்’

பேரின்பராஜா சபேஷ்   / 2019 ஜனவரி 02 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாண சபை கடந்த காலத்தில் நான்கு வருடங்களில் கலைக்கப்பட்டபோது போர்க்கொடி தூக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தற்போது கிழக்கு மாகாண சபைத் தேர்தல் இரண்டு வருடங்களாக நடத்தப்படாதுள்ளமை குறித்து எதுவும் பேசாது  மௌனித்திருப்பது அதன் கபடத்தனத்தை அம்பலப்படுத்துவதாக உள்ளதாக, மாகாண சுகாதாரத் துறை முன்னாள் அமைச்சர் எம்.எஸ். சுபைர் தெரிவித்தார்.

தேசிய வீடமைப்பு அதிகார சபையால் முன்னெடுக்கப்பட்டுவரும் அடிப்படை வசதிகளற்றோருக்கு வாய்ப்புகளை வழங்கும் விசேட திட்டத்தின்கீழ், மலசல கூடம் இல்லாத 25 பேருக்கு, முதற்கட்ட கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு, ஏறாவூரில் நேற்று (01) நடைபெற்றது.

இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தில், பிரதேச செயலாளர் வீ.யூசுப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், 05 வருடகால ஆயுளைக்கொண்ட கிழக்கு மாகாண சபை, கடந்தகாலத்தில் 04 வருடங்களில் கலைக்கப்பட்டபோது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அது ஜனநாயக விரோதச் செயல் எனக்கூறியதுடன், உடனடியாக தேர்தல் நடத்தப்படவேண்டுமென போர்க்கொடிதூக்கியதாகத் தெரிவித்ததுடன், எம்.ஏ. சுமந்திரன்  எம்.பி வழக்கொன்றையும் தாக்கல்செய்தார் என்றார்.

ஆனால், கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டு தற்போது 02 வருடங்களாகின்றன எனச் சுட்டிக்காட்டிய சுபைர், ஜனநாயகம் பற்றிப்பேசுகின்ற  சிறுபான்மை அரசியல் தலைமைகள் கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் உடனடியாக நடத்தப்படவேண்டுமென்ற கோரிக்கையை இதுவரை ஆணித்தரமாக முன்வைக்கவில்லையென்றும் எனவே, கிழக்கு மாகாண சபைத் தேர்தல் உடனடியாக நடத்தப்பட்டு ஆட்சி அதிகாரம் மக்கள் பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கப்படவேண்டுமென்றும் தெரிவித்தார்.

இதேவேளை, இன, மத, பிரதேச வெறுபாடின்றிப் பணியாற்றிவருகின்ற தற்போதைய கிழக்கு மாகாண ஆளுநரை இடமாற்றக்கூடாது என்ற கோரிக்கையைத் தான் ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .