Suganthini Ratnam / 2016 ஓகஸ்ட் 03 , மு.ப. 05:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் இன அழிப்பை விசாரிப்பதற்கு விசேட நீதிமன்றமொன்றை அமைக்குமாறு சர்வதேச சமூகத்திடமும் நல்லாட்சி அரசாங்கத்திடமும் தேசிய சுஹதாக்கள் நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
26ஆவது தேசிய சுஹதாக்கள் தினத்தையொட்டி அந்நிறுவனம் இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், '1990ஆம் ஆண்டு இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் மிக முக்கியமான ஆண்டாகும். 1990ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் இரத்த வெள்ளம் பாய்ந்தோடியது. கிழக்கு மாகாணாத்திலுள்ள பள்ளிவாசல்களிலும் முஸ்லிம் கிராமங்களிலும் ஜனாசாக்கள் (சடலங்கள்) குவிந்தன.
இந்தக் கொடிய நினைவுகளின் மையமான ஓகஸ்ட் 3ஆம் திகதியை இலங்கை முஸ்லிம்கள் சுஹதாக்கள் தினமாகப் பிரகடனப்படுத்தி நினைவுகூருகின்றனர். முஸ்லிம்கள் மீதான இனவாதம்; இன்றுவரை தீர்வில்லாமலேயே தொடர்கின்றது.
காத்தான்குடிப் பள்ளிவாசல் படுகொலைச் சம்பவமும் வடக்கிலிருந்து ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட சம்பவமும் முஸ்லிம்கள் வரலாற்றில் தொடர்ச்சியான மைல்கல்லாகும்.
1990களில் கிழக்கு மாகாணத்திலிருந்து முஸ்லிம்களை இனச் சுத்திகரிப்பு செய்து முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விட்ட இனப்படுகொலைகளும் அழிவுகளும் வரலாற்றுப்பதிவுகளுக்குரிய பேரவலமாகும்.
பொத்துவில் தொடக்கம் அக்கரைப்பற்று ஒலுவில், சாய்ந்தமருது, காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி, வாழைச்சேனை, கிண்ணியா, மூதூர் என பல முஸ்லிம் பிரதேசங்கள் மீது மிகப் பெரியளவிலான பயங்கரவாதத்தை புலிகள் ஏவி முஸ்லிம்களை வெளியேற்ற முயன்றனர்.
12.7.1990 அன்று புனித மக்கா ஹஜ் யாத்திரையை முடித்துவிட்டு கொழும்பிலிருந்து கல்முனை வழியாக காத்தான்குடி திரும்பிக் கொண்டிருந்த 68 முஸ்லிம்களை குருக்கல்மடம் பகுதியில் வைத்து தமீழ விடுதலைப்புலிகள் வெட்டியும் சுட்டும் கடத்தியும் கொலை செய்தனர். அவர்களின் சடலங்களைக் கூட (ஜனாசாக்கள்); இன்று வரை காட்டவில்லை.
3.8.1990 அன்று காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜும்மா பள்ளிவாசல் மற்றும் ஹுஸைனிய்யாப்பள்ளிவாசல் ஆகிய இரண்டு பள்ளிவாசல்களிலும் இரவு புனித இஷாத் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது விடுதலைப்புலிகளினால் 104 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.
ஏறாவூர் ஐயங்கேணி மற்றும் சதாம் ஹுஸைன் கிராமங்களில் உறக்கத்திலிருந்த அப்பாவி ஆண்கள் பெண்கள் குழந்தைகள் கர்ப்பிணித்தாய்மார்கள் என 116 பேர் வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்டனர். இத்தனையும் மூடி மறைக்கப்பட்ட இன்னும் பல துயர வரலாறுகளும் மன்னிக்கப்பட்டாலும் மறக்க முடியாத நினைவுகளாகும்.
விலை மதிக்க முடியாத இத்தனை உயிர்கள் உடைமைகளை இழந்து வடக்கையும் கிழக்கையும் பிரித்து எமது சமூகத்தின் அரசியல் அதிகாரத்தை தக்கவைத்திருக்கும் இச்சந்தர்ப்பத்தில் மீண்டும் வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு முட்டுக்கொடுக்கும் சில முஸ்லிம் அரசியல் தலைமைகள் இந்த முடிவிலிருந்து பின்வாங்கி எக்காரணம் கொண்டும் வடக்கு கிழக்கு இணையாமல் பாதுகாத்துக்கொள்வதுடன் முஸ்லிம் சமூகம் தனித்துவ அரசியலை நடாத்துவதற்கு ஒரு அணியாக திரளவேண்டும் என சுஹதாக்கள் சார்பாக அழைப்பு விடுக்கின்றோம்' என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 minute ago
29 minute ago
32 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
29 minute ago
32 minute ago
47 minute ago