2025 மே 13, செவ்வாய்க்கிழமை

‘வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கான நிதி கூட்டமைப்பிடமே வழங்கப்படும்’

Editorial   / 2019 பெப்ரவரி 11 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.விஜயரெத்தினம், வடிவேல் சக்திவேல், வா.கிருஸ்ணா

ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சிப்பீடமேறுவதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, நூறு சதவீதமான பங்கை வகித்ததெனத் தெரிவித்த கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், “வடக்கு, கிழக்கு மாகாணங்களின்  அபிவிருத்திக்கான நிதி, கூட்டமைப்பினரிடமே இனி கையளிக்கப்படும்” என்றார்.

களுதாவளை மகா வித்தியாலய (தேசிய பாடசாலை) பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டியில் பிரதமவிருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பாக கூட்டமைப்பினருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொண்டதுடன், “தமிழ் மக்களின் எதிர்கால தீர்வை நோக்கியே, கூட்டமைப்பினர் எம்முடன் கைகோர்த்துள்ளனரே தவிர, சுயநலத்துக்காகவல்ல” என்றார்.

“கடந்த இரு மாதங்களின் முன்பு எங்களுடைய பிரதமர் அரசியல் சூழ்ச்சியின் காரணமாக சட்டத்தோடு போராடி ஆட்சியை மீண்டும் கைப்பற்றினார்” என்று தெரிவித்த அவர், “இதற்குப் பக்கபலமாய் நின்று உதவிய சிறுபான்மை மக்களது தீர்வுகளுக்கு தமது பங்களிப்பைத் தருவார் எனக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்” என்றார்.

“தமிழ்த் தேசியத்தை நேசிக்கின்ற எமது நாட்டிலுள்ள மக்களும் புலம்பெயர் தேசங்களில் வாழ்வோரும் பொறுமையாக இருக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்ட அவர், “சிலரது விமர்சனங்கள் எங்களைப் பாதிப்பதோடு மட்டுமல்லாது, தெற்கிலும் பாதிப்பை ஏற்படுத்தும்” என்றார்.

தனக்குக் கிடைத்துள்ள கல்வி இராஜாங்க அமைச்சுப் பதவியானது வடக்கு, கிழக்கு மக்களுக்குக் கிடைத்துள்ள வரப்பிரசாதமாகும் என்று நினைவுப்படுத்திய அவர், இதனை சரியாகப் பயன்படுத்தி வடக்கு, கிழக்கின் கல்வி வளர்ச்சியை உயர்த்த வேண்டும். யுத்தத்தால் அழிவடைந்துள்ள வடக்கு, கிழக்கின் கல்வி, பொருளாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை சீர் செய்யவேண்டிய பாரிய பொறுப்பு தனக்குள்ளது என்றார்.

எமது வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மாத்திரமே, யுத்தத்தால் பாதிப்புற்றது என்று தெரிவித்த அவர், தேவைகளுக்காக, இவ்விரு மாகாணங்களைச் சேர்ந்தவர்களும் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X