2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

’வவுணதீவில் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை’

வா.கிருஸ்ணா   / 2018 மே 27 , பி.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு -  வவுணதீவு பகுதியில், கட்டடப் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலையொன்றை அமைப்பதற்கான நடவடிக்கையை மீள்குடியேற்ற அமைச்சின் ஊடாக மேற்கொண்டுவருவதாக, மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் உள்ள தனது அலுவலகத்தில், இன்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

அண்மையில் மீள்குடியேற்ற அமைச்சரை சந்தித்து விடுத்த வேண்டுகோளின் அடிப்படையிலேயே, இந்தத் தொழிற்சாலை அமைப்பற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், அத்தொழிற்சாலை வவுணதீவு பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ளதாகவும் அதற்கான காணி தெரிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் மிக விரைவாக தொழிற்சாலை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இந்தத் தொழிற்சாலையில், மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 1,500 இளைஞர், யுவதிகள் தொழில்வாய்ப்புகளை பெற்றுக்கொள்ளமுடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதற்கமைய, மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைப்பதற்காக 6,500 வீடுகள் ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவற்றுக்கான பொருட்களும் இந்தத் தொழிற்சாலையிலேயே உற்பத்தி செய்யப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, ஏறாவூர்ப்பற்று பிரதேசத்துக்கு உட்பட்ட இலுப்படிச்சேனையில் இயங்கிவந்த ஓட்டு தொழிற்சாலையை மீள இயங்கச் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் சனிக்கிழமை அது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு விசேட குழுவினர் வரவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X