Kogilavani / 2016 மே 04 , மு.ப. 03:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
'மத்திய மாகாணத் தமிழ் கல்வி நடவடிக்கைகளில் அரசியல் ரீதியான தலையீடுகள் அதிகரிக்கும்பட்சத்தில் மக்களைத் திரட்டி போராட வேண்டிய நிலைமை ஏற்படும்' என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
'தொழிற்சங்க காரியாலயங்களுக்குப் பிரதிநிதிகளை நியமிப்பது போல மத்திய மாகாணத் தமிழ் பாடசாலைகளுக்கு அரசியல் ரீதியில் அதிபர்கள் நியமிக்கப்படுவதானது, மத்திய மாகாணத்தில்; தமிழ் கல்வி வளர்ச்சியில் மேலும் பாதகத்தை ஏற்;படுத்தும்' என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மத்திய மாகாணசபை அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் கூறினார். இங்கு மேலும் கூறிய அவர், 'மத்திய மாகாண தமிழ் பாடசாலைகளில் 5 வருடங்களுக்கு மேல் சேவையாற்றிய அதிபர்களை, வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்வதற்கான பிரேரணை கடந்த வருடம் இச்சபையில் நிறைவேற்றப்பட்டது.
ஆனால், அவ்வாறான இடமாற்றம் இவ்வருடம் இடம்பெறவில்லை. முதலாம் தவணையில் இடம்பெற வேண்டிய அதிபர் இடமாற்றம், இரண்டாம் தவணையில் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. அதிபர் இடமாற்றம் தொடர்பில் உரிய நேர்முகப் பரீட்சைகள் நடத்தப்படாது தொழிற்சங்கங்களுக்குப் பிரதிநிதிகளை நியமிப்பது போல அரசியல் ரீதியாகவும் எதிர்கால அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் நோக்கிலும்; இடமாற்றங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதனை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த அநீதியைச் சுட்டிக்காட்டுவதற்கு அதிபர்கள் தயங்குகின்றனர். 1,000 பாடசாலைகள் அபிவிருத்தித் திட்டத்தில் பயிற்சிபெற்ற அதிபர்கள் ஏனைய பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்படுவதானது தேசிய கல்விக் கொள்கைக்கு முரணானதாகும்.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் நுவரெலியா மாவட்டத்திலுள்ள சில கல்வி வலயங்களில் சிறந்த பெறுபேறுகள் கிடைத்துள்ளன. இந்தப் பெறுபேறுகளைப் பெற்றுத் தந்த அதிபர்களை இடமாற்றம் செய்யும்போது வலய கோட்டக் கல்விப் பணிப்பாளர்களின் ஆலோசனைகள் பெறப்படவேண்டும். நேர்முகப் பரீட்சைகளின் அடிப்படையில் தகுதியும் தராதரமும் அனுபவமும் உள்ள அதிபர்களைப் பொருத்தமான பாடசாலைகளுக்கு நியமிப்பதற்கு மத்திய மாகாண முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார். 'தமிழ் பாடசாலைகளுக்கான அதிபர் இடமாற்றங்கள் குறித்து மத்திய மாகாண முதலமைச்சருக்கு உரிய தகவல்கள் வழங்கப்படவில்லை என்று நினைக்கின்றேன். இவ்விடயம் தொடர்பில் முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுத்து மத்திய மாகாணத் தமிழ் பாடசாலைகளின் கல்வி வளர்ச்சிக்கு உரிய பங்களிப்பு செய்ய வேண்டும்' என அவர் இதன்போது கோரினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .