2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

பெருந்தோட்டப் பகுதிகளில் தமிழ் மொழி அமுலாக்கலில் தொடர்ந்து பாரபட்சம்

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 03 , பி.ப. 02:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

( எஸ்.சுவர்ணஸ்ரீ )

இலங்கையின் அரசியல் அமைப்பில் தமிழ் மொழி தேசிய மொழியாகவும், அரச கரும மொழியாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளபோதும் மலையக பிரதேசங்களில் காணப்படுகின்ற அடித்தள தோட்டத் தொழிலாளர்கள் தங்கள் தாய் மொழியில் அரச நிறுவனங்களுடன் தொடர்பு கொள்வதற்கும் சேவைகளை பெற்றுக் கொள்வதற்கும் நடைமுறையில் பல தடைகள் காணப்படுவதாக சகவாழ்வு மன்றத்தின் மொழி மற்றும் நல்லாட்சிக்கான திட்ட முகாமையாளர்  எம்.முத்துக்குமார் தெரிவித்தார்.

ஹட்டன் சமூக நல நிறுவனத்தின் மூலமாக நடத்தப்பட்டு வருகின்ற மாதாந்த தொடர் மாலை கூட்டமாகிய 'களம்' நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் பேசுகையில் கூறியதாவது:-

இலங்கையில் 1833ஆம் ஆண்டு நடைபெற்ற மொழி பிரச்சினை தமிழ், சிங்கள மொழிகளுக்கிடையில் ஏற்படவில்லை. மாறாக  ஆங்கிலத்தில் அரச கருமங்கள் நடைபெறுவதற்கு எதிராக தமிழ், சிங்கள மக்கள் குரல் கொடுத்தனர். இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்பு 1956ஆம் ஆண்டு சிங்கள மொழி அரச கரும மொழியாக பிரகடனப்படுத்தப்பட்ட நிலையில் சில அரசியல்க் காரணங்களினால் தமிழ் மொழி அமுலாக்கம் குறித்து கருத்தில் கொள்ளப்படவில்லை. எனவே அன்றிலிருந்து இன்றுவரையிலும் நமது நாட்டில் இனங்களுக்கிடையில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதற்கு மொழி ஒரு பிரதான காரணமாக இருந்து வந்துள்ளது.

1972ஆம் ஆண்டு அரசியல் அமைப்பில் சிறுபான்மையினரின் உரிமைகள் பல்வேறு வழிகளில் மீறப்பட்டிருந்தன. 1978ஆம் ஆண்டு இலங்கை சோசலிச குடியரசு அரசியல் அமைப்பிலே, தமிழ் மொழி தேசிய மொழியாக உறுதிப்படுத்தப்பட்டிருந்த போதும் நிர்வாக மொழி குறித்து சொல்லப்படவில்லை. அதேநேரம் 16ஆம் அரசியல் அமைப்பு திருத்தத்தில் தமிழ் மொழி நிர்வாக மொழியாகவும், வழக்காறு மன்றங்களுக்கான பயன்பாட்டு மொழியாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும் நடைமுறையில் வடக்கு கிழக்கு தவிர்ந்த தமிழ் மக்கள் செறிவாக வாழக்கூடிய ஏனைய பிரதேசங்களில் தமிழ் மொழி அமுலாக்கத்தின் நடைமுறை மிக மிக குறைவாகவே காணப்படுகின்றது. ஆனால், இலங்கை சனத்தொகையில் 14 வீதமான தமிழ் பேசும் மக்கள் வடகிழக்கு பகுதிகளுக்கு வெளியிலேயே வாழ்கின்றனர். கடந்த காலங்களில் ஜனாதிபதி அவர்களால் 29 பிரதேச செயலாளர் பிரிவுகள் இருமொழி நிர்வாக பிரிவுகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை மலையகத் தமிழர்கள் வாழக்கூடிய பிரதேசங்களாக இருக்கின்றன.

குறிப்பாக 1999ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின்படி நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவ, ஹங்குராங்கெத்த, கொத்மலை, நுவரெலிய, வலப்பனை மற்றும் பதுளை மாவட்டத்தில் பண்டாரவளை, எல்ல, ஹல்துமுல்ல, அப்புத்தளை, ஹாலி எல, மீகஹகிவுல, பசறை போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகளும், 2001ஆம் ஆண்டு கொழும்பு மத்தி, திம்பிரிகஸயா பிரதேச செயலாளர் பிரிவுகளும், 2003ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட  வர்த்தமானி அறிவித்தலின் படி பதுளை மாவட்டத்தில் பதுளை, லுணுகல, வெலிமட, சொரணந்தொட, களுத்துறை மாவட்டத்தில் பேருவளையும், கண்டி மாவட்டத்தில் அக்குறணை, தெல்தொட, பன்வில, பஸ்பாகே கோறளை, உடபலாத்த மற்றும் புத்தளம் மாவட்டத்தில் கல்பிட்டிய,  முந்தல், புத்தளம், வணாத்தவில்லு போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகள் இருமொழி நிர்வாக அலகுகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

மேற்கூறப்பட்ட பிரதேசங்களில் நடைமுறையில் தமிழ் மொழி அமுலாக்கம் என்பது மந்தகதியில் அல்லது இல்லாமலே காணப்படுகின்றது. குறிப்பாக மலையக பிரதேசங்களில் தமிழில் கடமையாற்றுவதற்கான பணியாளர்கள் தொடர்ந்தும்   பற்றாக்குறையாகவே இருந்து வருகின்றனர். இதன் காரணமாக பாமர தோட்டத் தொழிலாளர்கள் பிரதேச செயலகம், கிராம சேவகர்கள், பொலிஸ் நிலையகங்கள் போன்ற பல அரச நிறுவனங்களுடன் தங்கள் தாய்மொழியில் தொடர்பு கொள்வதற்கும் சேவைகளை பெற்றுக்கொள்வதற்கும் தடைகள் காணப்படுகின்றன. குறிப்பாக பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ் போன்ற ஆவணங்களை தமிழில் பெற்றுக்கொள்ள முடியாமையால் பல தசாப்தங்களாகவே பல்வேறு தவறுகள் மலையக சமூகத்தில் இடம்பெறுகின்றமையை நாம் அறிவோம்  

எனவே உறுதிப்படுத்தப்பட்ட உரிமைகளை பெற்றுக்கொள்வது தொடர்பாக மக்களுக்கு தெளிவுபடுத்துவதுடன் உரிமைகள் மீறப்படுகின்றபோது அவற்றுக்கு எதிராக சட்டரீதியாக குரல் கொடுப்பதற்கு மக்களை தயார்படுத்தவேண்டும். யாருக்கு உரிமைகள் மீறப்படுகின்றனவோ அவர்கள் அதனை உணர்ந்து அவற்றை பெற்றுக்கொள்வதற்கு உறுதியுடன் முன்னெடுப்புகளை மேற்கொள்ள முயல்வது அவசியமாகும். அதற்கான மேலதிக முயற்சிகளையும், உதவிகளையும் சமூக அமைப்புகளும், புத்திஜீவிகளும்  மேற்கொள்வதும் இன்றியமையாததாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .